search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் கைதி தப்பி ஓட்டம்: 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு
    X

    திருவண்ணாமலையில் கைதி தப்பி ஓட்டம்: 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு

    திருவண்ணாமலையில் கைதி தப்பி ஓடியதால் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த பவித்ரம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 38). கால்வாய்க்குள் மண்ணை கொட்டியதை தட்டிக் கேட்ட தகராறில் ஊராட்சி செயலர் பச்சையப்பனை வைத்தியலிங்கம் தாக்கினார்.

    மேலும், அங்குள்ள புனித அந்தோணியார் பெண்கள் பள்ளி கால்வாயில் மண் கொட்டிய தகராறில், அந்த பள்ளி முதல்வர் பெலிண்டா என்பவரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்து தாக்க முயன்றுள்ளார்.

    இதுதொடர்பான புகாரில், வெறையூர் போலீசார் வழக்குப்பதிந்து நேற்று முன்தினம் வைத்திய லிங்கத்தை கைது செய்தனர். வைத்தியலிங்கத்தின் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    விசாரணைக்கு பிறகு, திருவண்ணாமலை கோர்ட்டில் வைத்தியலிங்கத்தை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை, கோர்ட்டு காவலில் வேலூர் ஜெயிலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

    ஜெயிலுக்கு அழைத்து செல்லும் பாதுகாப்பு பணியில் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டு சீனிவாசன் ஆகியோர் இருந்தனர்.

    திருவண்ணாமலை பஸ் நிலையம் எதிரே உள்ள ஓட்டலில் கைதி வைத்தியலிங்கத்துடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாப்பிட்டனர்.

    அப்போது, கை கழுவச் செல்வதாக கூறி விட்டு சென்ற வைத்தியலிங்கம் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து, திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து தப்பிய கைதியை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில், கைதி தப்பி ஓடிய சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவி, ஏட்டு சீனிவாசன் ஆகிய 3 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.


    Next Story
    ×