search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலத்தடி நீரை செறிவூட்ட சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு
    X

    நிலத்தடி நீரை செறிவூட்ட சாத்தனூர் அணையில் தண்ணீர் திறப்பு

    குடிநீர் பயன்பாட்டுக்கு மற்றும் நிலத்தடி நீரை செறிவூட்ட இன்று காலை சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தென்பெண்ணையாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றில் சாத்தனூர் அணை உள்ளது. 119 அடி உயரம் கொண்ட இதன் மொத்த கொள்ளவு 7 ஆயிரத்து 321 கன அடியாகும். இந்த அணையின் மூலம் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 45 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    கடந்தாண்டு வடகிழக்குப் பருவ மழை பொய்த்ததால் அணைக்கான நீர்வரத்து பெருமளவு குறைந்தது. கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி அணையில் நீர் இருப்பு 91.10 அடியாக இருந்தது. நீர் இருப்பு குறைவாக இருந்தாலும் இரண்டு மாவட்ட விவசாயிகளின் பாசன பயன்பாட்டுக்காக அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி கடந்த மாதம் 12-ந்தேதி முதல் இம்மாதம் 14-ந்தேதி வரை கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணையில் 81 அடி தண்ணீர் உள்ளது.

    இருந்தாலும், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாசன மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்ததால் பொது மக்கள் குடிநீருக்காக அவதிப்படுகின்றனர்.

    இந்நிலையில், குடிநீர் பயன்பாட்டுக்காவும், கிணறுகளில் நிலத்தடி நீரை செறிவூட்டி கோடையை சமாளிப்பதற்காகவும் சாத்தனூர் அணையைத் திறக்குமாறு கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர். திறக்கப்பட்ட தண்ணீர் தென் பெண்ணையாற்றில் நேரடியாக சென்றது.

    306.72 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் தென் பெண்ணையாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றைக் கடக்க வேண்டாம். கால்நடைகளையும் ஆற்றை கடக்க அனுமதிக்க வேண்டாம்“ என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஆற்றில் தண்ணீர் நேரடியாக செல்வதால் கரையில் இருந்து 2 கி.மீ. தொலைவு வரையில் நிலத்தடி நீர் செறிவூட்டப்படும். கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக உயரும். இதன் மூலம் கோடைக் காலத்தை சமாளிக்க முடியும்.

    பொதுமக்களின் தேவையையும், கால்நடைகளின் தேவையும் பூர்த்தி செய்ய முடியும். அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்தாலும் மக்களின் தேவைக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×