search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெட்டியார்பாளையத்தில் இளம்பெண் அடித்து கொலையா? ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம்
    X

    ரெட்டியார்பாளையத்தில் இளம்பெண் அடித்து கொலையா? ஆஸ்பத்திரியில் உறவினர்கள் போராட்டம்

    ரெட்டியார் பாளையத்தில் கல்லூரி மாணவி அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு சுப்பையா நகரை சேர்ந்தவர் மெய்யப்பன். இவர், பொதுப்பணித்துறையில் என்.எம்.ஆர். ஊழியராக பணிபுரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகள் புவனேஸ்வரி (வயது 22). இவர், வேல்ராம்பட்டில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    புவனேஸ்வரிக்கும், ரெட்டியார்பாளையம் மோதிலால் நகரை சேர்ந்த ஜிப்மர் ஊழியர் லோகேஸ்வரனுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புவனேஸ்வரி கணவன் வீட்டில் இருந்து கொண்டே கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கணவர் வீட்டில் புவனேஸ்வரி மயங்கி கிடப்பதாக அவரது தாய்க்கு பக்கத்து வீட்டுக்காரர் செல்போனில் தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து தாய் விஜயகுமாரி மற்றும் உறவினர்கள் அலறியடித்து கொண்டு வந்து பார்த்தனர். அப்போது புவனேஸ்வரி தரையில் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதனர்.

    அதேவேளையில் லோகேஸ்வரன், அவரது தாய் கஸ்தூரி ஆகியோர் மாயமாகி இருந்தனர்.

    இதையடுத்து புவனேஸ்வரியின் உறவினர்கள் இதுகுறித்து ரெட்டியார் பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே புவனேஸ்வரியின் உறவினர்கள் உடல் வைக்கப்பட்டு இருந்த கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

    புவனேஸ்வரியை அவரது கணவர் மற்றும் மாமியார் அடித்து கொன்று விட்டதாகவும், எனவே, அவர்களை கைது செய்த பின்னரே உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரி முன்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதையடுத்து ரெட்டியார் பாளையம் போலீசார் லோகேஸ்வரனை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து புவனேஸ்வரியின் உறவினர்கள் கூறியதாவது:-

    திருமணமான நாள் முதலே புவனேஸ்வரியை அவரது கணவர் குடும்பத்தினர் அடித்து கொடுமை படுத்தி வந்தனர். மேலும் புவனேஸ்வரிக்கும், அவரது கணவர் லோகேஸ்வரனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அது போல் நேற்று காலையும் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது புவனேஸ்வரியின் செல்போனை பறித்து லோகேஸ்வரன் உடைத்து விட்டார்.

    இதையடுத்து புவனேஸ்வரி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு வந்தார். அப்போது நாங்கள் புவனேஸ்வரியை சமாதானம் செய்து எங்களிடம் இருந்த ஒரு செல்போனை புவனேஸ்வரியிடம் கொடுத்து கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம்.

    இன்று அதிகாலை 4 மணிக்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் எங்களுக்கு போன் செய்து புவனேஸ்வரி மயங்கி கிடப்பதாக தெரிவித்தனர். அங்கு வந்து பார்த்த போது, தரையில் புவனேஸ்வரி பிணமாக கிடந்தார். மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டபோது, குடும்ப தகராறில் புவனேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள்.

    ஆனால், புவனேஸ்வரியின் முகத்தில் ரத்த காயங்கள் உள்ளன. எனவே, புவனேஸ்வரி அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×