search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுருட்டப்பள்ளி, சிற்றபாக்கம் தடுப்பு அணைகள் முழுவதும் வறண்டன: 20 ஆயிரம் ஏக்கர் விவசாய பயிர் பாதிப்பு
    X

    சுருட்டப்பள்ளி, சிற்றபாக்கம் தடுப்பு அணைகள் முழுவதும் வறண்டன: 20 ஆயிரம் ஏக்கர் விவசாய பயிர் பாதிப்பு

    ஊத்துக்கோட்டை அருகே சுருட்டப்பள்ளி மற்றும் சிற்றபாக்கம் தடுப்பு அணைகள் முழுவதும் வறண்டதால் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் ஆரணியார் அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம்.

    இப்படி திறந்து விடும் தண்ணீர் சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, சிற்றபாக்கம், பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் கடலில் கலக்கிறது.

    உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கவும், விவசாயிகள் பயன்பெறும் வகையிலும் ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டபள்ளியில் கடந்த 1953ம் ஆண்டு தடுப்பு அணை கட்டப்பட்டது. இதே போல் சிற்றபாக்கம் பகுதியில் 1983ம் ஆண்டு தடுப்பு அணை உருவாக்கப்பட்டது.

    இந்த தடுப்பு அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை கொண்டு விவசாயிகள் ஆண்டுக்கு மூன்று போகங்கள் விவசாயம் செய்து வந்தனர்.



    இந்த நிலையில் பருவ மழை பொய்த்து போனதால் பிச்சாட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் சுருட்டபள்ளி, சிற்றபாக்கம் தடுப்பு அணைகள் தண்ணீர்கள் இன்றி முழுவதும் வறண்டு காணப்படுகின்றன. மழை பொய்த்து போனதால் ஆரணி ஆறு பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது.

    பருவ மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் நெல், வேர்க்கடலை, கரும்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து இருந்தனர். பருவ மழை பொய்த்து போய் தடுப்பு அணைகளும் வறண்டு காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    பிச்சாட்டூர் அணையில் இருந்து பழவேற்காடு வரை 80 கி.மீட்டர் தூரத்துக்கு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பயிர் செய்து வருகிறார்கள்.

    இவர்கள் சுருட்டப்பள்ளி, சிற்றபாக்கம் தடுப்பணைகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரையே நம்பி இருந்தனர். வழக்கமாக கோடை காலத்திலும் 15 அடி வரை இந்த தடுப்பு அணைகளில் தண்ணீர் இருக்கும்.

    தற்போது தண்ணீர் இன்றி தடுப்பு அணைகள் வறண்டு உள்ளதால் 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கருகி வரும் பயிர்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நிலத்தடி நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் ஆரணி ஆற்று கரை ஓரங்களில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளும் வறண்டு வருகின்றன. எனவே அப்பகுதியில் விரைவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.
    Next Story
    ×