search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    13 ஆண்டுக்கு பிறகு சோழவரம் ஏரி வறண்டது
    X

    13 ஆண்டுக்கு பிறகு சோழவரம் ஏரி வறண்டது

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் சோழவரம் ஏரி 13 ஆண்டுக்கு பிறகு தண்ணீர் இன்றி வறண்டு இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    செங்குன்றம்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.

    பருவமழை பொய்த்ததால் ஏரிகளின் நீர் இருப்பு மிகவும் குறைந்து உள்ளது. இதனால் சென்னை நகர மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி உள்ளனர்.

    நான்கு ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் ஆயிரத்து 491 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதனை கொண்டு இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே குடிநீர் தேவையை சமாளிக்க முடியும்.

    இந்த நிலையில் சோழவரம் ஏரி கடந்த 2004-ம் ஆண்டுக்கு பின்னர் 13 ஆண்டுக்கு பிறகு தற்போது வறண்டு உள்ளது. இப்போது வெறும் 6 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு இருக்கிறது. ஏரியில் 881 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    சோழவரம் ஏரியில் இருந்து ராட்சத மோட்டார்கள் மூலம் புழல் ஏரிக்கு வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இப்போது ஏரி வறண்டு வருவதால் மோட்டார் மூலம் தண்ணீரை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு உள்ளது.

    ஏரியில் குட்டை போல் மட்டுமே தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த தண்ணீரை கால்வாய் வெட்டி மோட்டார் மூலம் மீண்டும் புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்ப முடியுமா? என்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    13 ஆண்டுக்கு பிறகு தண்ணீர் இன்றி சோழவரம் ஏரி வறண்டு இருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடிநீர் தேவையை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் கவலை அடைந்து உள்ளனர்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்படுவது மட்டுமே ஆறுதல் தருவதாக இருந்தது. இப்போது கண்டலேறு அணையிலும் நீர்மட்டம் குறைந்ததால் கிருஷ்ணா நீர் திறப்பு குறைக்கப்பட்டது. பூண்டி ஏரிக்கு வெறும் 9 கன அடி மட்டுமே தண்ணீர் வருகிறது.

    பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 380 கன அடியும், சென்னை மெட்ரோ வாட்டர் போர்டுக்கு பேபி கால்வாயில் 10 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரிக்கு சோழவரம், பூண்டி ஏரிகளில் இருந்து நீர்வரத்து இல்லாததால் குறைந்த அளவு தண்ணீரே இருப்பு உள்ளது.

    தற்போது குடிநீர் தேவைக்கு எடுப்பதாலும், சுட்டெரிக்கும் வெயில் காரணமாகவும் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 593 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது.

    இந்த தண்ணீரை வைத்து ஒரு மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா? என்பது சந்தேகமே?

    செம்பரம்பாக்கம் ஏரியில் 476 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. பூண்டி ஏரியில் இருந்து 380 கன அடி தண்ணீர் வருகிறது. 74 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் 4 ஏரிகளின் நீர் இருப்பும் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மாற்று வழியை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.

    காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குல்குவாரி குட்டைகளில் உள்ள நீர் மற்றும் விவசாய கிணறுகளில் உள்ள தண்ணீரை பயன்படுத்த முடிவு செய்து உள்ளனர்.

    போர்க்கால அடிப்படையில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாட்டில் இருந்து சென்னை நகர மக்கள் தப்பிக்க முடியும்.
    Next Story
    ×