search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பாக தீபா பேரவை கலைந்துவிடும்: முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் பேட்டி
    X

    ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பாக தீபா பேரவை கலைந்துவிடும்: முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் பேட்டி

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்பாகவே கலைந்து விடும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன் பேட்டியில் கூறியுள்ளார்.

    திருச்சி:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கி கொடியையும் அறிமுகப்படுத்தினார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலிலும் தீபா போட்டியிடுவதாக அறிவித்தார்.

    தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் தீபா பேரவைக்கு ஆதரவு பெருகி வந்தது. இந்த நிலையில் தீபா தொடர்ந்து எடுத்த சில முடிவுகள் அவரது பேரவை அமைப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

    அ.தி.மு.க. சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியவற்றிற்கு பலத்த போட்டியாக வருவார் என்று எதிர் பார்க்கப்பட்ட தீபாவிற்கு தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்கள் அமைப்பை பலவீனப்படுத்த தொடங்கின.

    நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடி, நிதி நிர்வாகம், சுற்றுப்பயண அறிவிப்புகளில் குழப்பம் என தொடர்ந்து தீபா ஏற்படுத்திய குளறுபடிகள் சிக்கல்களுக்கு மேல் சிக்கல்களை ஏற்படுத்தின. இந்த நிலையில் அவரது கணவர் மாதவனும் தனிக் கட்சி தொடங்குவதாக அறிவித்தது தீபாவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

    தீபா தற்போது கடும் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளார். தொடர்ந்து அவர் சவால்களை சமாளித்து அரசியல் களத்தில் நீடிப்பாரா? என்பதில் தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் தீபா மீதான நம்பகத்தன்மையையும் வெகுவாக குறைத்துள்ளது.

    இந்த நிலையில் தீபா பேரவையில் தீவிரமாக செயல்பட்டவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான திருச்சி சவுந்தரராஜன் அதிலிருந்து விலகியுள்ளார். மேலும் இன்று திருச்சியில் தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசி அடுத்த கட்ட அரசியல் முடிவு குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

    தீபா பேரவை குறித்து திருச்சி சவுந்தரராஜன் கூறியதாவது:-

    தீபா பேரவை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்பாகவே கலைந்து விடும். இந்த நிலைக்கு தீபாவே காரணம். கடந்த ஆண்டு டிசம்பர் 18-ந்தேதியே தீபா அரசியலுக்கு வருவது குறித்து தெரிவிக்க வேண்டும் என முதன் முதலில் அழைப்பு விடுத்தது நான்தான். ஆனால் தீபா தொடர்ந்து தாமதித்துக் கொண்டே இருந்தது நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.

    எடுக்க இருக்கும் முடிவில் இருந்து காலதாமதம், அப்போது சொல்கிறேன், இப்போது சொல்கிறேன் என்று கூறிவந்தது தொடர்ந்து தீபாவுக்கு பின்னடைவாகவே இருந்துள்ளது.

    எனவே தன்னை நம்பி தீபா பேரவைக்கு வந்தவர்களின் எதிர்காலம் வீணாகி விடக்கூடாது என்பதற்காக இன்று ஆலோசனை கூட்டத்தை நடத்தி அவரவர்கள் முடிவு செய்து எந்த கட்சியில் தொடரலாம் என்பதை தீர்மானிக்க அனைவருக்கும் அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறினார்.

    Next Story
    ×