search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் சால்வை-பொன்னாடைக்கு பதில் புத்தகங்கள் வழங்குங்கள்- மு.க.ஸ்டாலின்
    X

    என் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம் சால்வை-பொன்னாடைக்கு பதில் புத்தகங்கள் வழங்குங்கள்- மு.க.ஸ்டாலின்

    என் பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம், சால்வை மற்றும் பொன்னாடைக்கு பதில் புத்தகங்கள் வழங்குங்கள் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    ஒரே இல்லத்தில் வாழ்ந்து சதிச் செயலில் இறங்கி லஞ்ச ஊழலில் ஈடுபட்டு சொத்துகளை வாங்கிக் குவித்த குற்றவாளியின் பினாமி ஆட்சிக்கு எதிரான தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், போராட்டக்களங்களை தி.மு.க. தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

    தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியத் தலைநகர் புதுடெல்லி வரை இதற்கான குரலை முன்னெடுத்துள்ளோம். மக்களின் விருப்பத்துக்கு மாறான அரசை அமைதி புரட்சி வழியில் அகற்றி, மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற அரசாக தி.மு.க. அரசு அமையும் வரையில் ஜனநாயக வழியிலான இந்தப் போராட்டம் தொடரும்.

    அந்த வெற்றித் திருநாள் வெகுதொலைவில் இல்லை. கழகத் தோழர்களின் சளைக்காத உழைப்புடனும் ஒத்துழைப்புடனும் தமிழக மக்களின் பேராதரவுடனும் அறவழிப் போராட்ட களத்தைத் தி.மு.கழகம் கட்டமைத்துச் சந்தித்து வரும் நிலையில், இடைக்கால இளைப்பாறுதல் போல என்னுடைய பிறந்தநாளுக்கான வாழ்த்து செய்திகளை கழகத்தினர் பலரும் முன் கூட்டியே தெரிவித்து வருகிறார்கள். இளைஞர் எழுச்சி நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளையும் ஆர்வத்துடன் மேற்கொண்டுள்ளனர்.

    பிறந்தநாள் விழாக்களை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாமென்றும், மக்களுக்குப் பயன் தரும் வகையில் ரத்ததானம், நலத்திட்ட உதவிகள், இயற்கையைப் போற்றும் விதத்தில் மரக்கன்று நடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று கழகத் தோழர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வேண்டுகோள் விடுத்து வருகிறேன்.

    அத்துடன் பேனர்கள், கட்-அவுட்டுகள் போன்ற பொது மக்களுக்கு அதிருப்தி ஊட்டும் பிறந்த நாள் அலங்கார ஆடம்பரங்களைக் கண்டிப்பாக, கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும் என்பதையும் ஒவ்வொரு முறையும் வேண்டுகோளாக விடுத்து வருகிறேன்.

    என்னுடைய வேண்டு கோளை அன்புக்கட்டளையாக ஏற்றுத் தவறாமல் செயல்படுத்தும் கழக உடன்பிறப்புகளின் கட்டுப்பாடே எனக்குக் கிடைக்கும் மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசாக கருதுகிறேன். அன்புமிகுதியாலும் ஆர்வத்தாலும் ஒரு சில தொண்டர்கள் ஆடம்பர விழாக்களை முன்னெடுப்பதும் உண்டு. அவற்றையும் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

    காலில் விழுவதைத் தவிர்த்துகம்பீரமான வணக்கம் செலுத்தி சுயமரியாதை காப்போம் என்ற என்னுடைய வேண்டுகோளை கழகத்தினர் கடைப்பிடித்து வருவது மட்டிலா மகிழ்ச்சி தருகிறது. அதுபோலேவே, நான் பங்கேற்கும் கழக நிகழ்ச்சிகளில் பேனர்களைத் தவிர்த்து, கழகத்தின் இரு வண்ணக் கொடிகளை காணும் திசையெல்லாம் பறக்கச் செய்யுங்கள் என்ற வேண்டுகோளையும் கழகத்தினர் தொடர்ந்து செயல்படுத்தி வருவது களிப்பை அள்ளித் தருகிறது.

    அதுபோலவே, பிறந்த நாள் விழா தொடர்பான படாடோபக் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, மக்கள் நலன் சார்ந்த விழாக்கள், கழகத்தின் கொள்கையை வெளிப்படுத்தும் கருத்தரங்கங்கள் போன்ற அறிவொளித் திருவிழாக்களை நடத்த வேண்டும் என்பதே என் வேண்டு கோளாகும்.

    அன்பின் மிகுதியால், என் பிறந்தநாளன்று நேரில் வாழ்த்து தெரிவிக்கும் கழகத்தினர் பலரும் பொன்னாடை என்ற பெயரில் செயற்கை இழையிலான பளபளப்பு சால்வைகளைப் போர்த்து வது வழக்கமாகிவிட்டது. சுயமரியாதை இயக்கமான திராவிட இயக்கம், “பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்“ என்பதையும், உடையில் கூட அந்த வேறுபாடு வெளிப்படக்கூடாது என்பதற்காக, தோளில் துண்டு அணியும் வழக்கத்தையும் கடைப் பிடித்தது.

    இடுப்பில் துண்டைக் கட்டுவது அடிமைத்தனம், தோளில் துண்டு அணிவது தனிமனித தன்மானம் என்ற வகையிலேயே அனைத்து சமூகத்தினருக்குமான உரிமையை கழகம் உணர்த்தியது. பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் என கழகத்தின் முன்னோடிகள் இந்தப் பழக்கத்தைக் கடைப் பிடித்தனர்.

    தோளில் அணியும் அந்த துண்டு, கைத்தறித் துணியாக இருந்தால் நெசவாளர்களின் வாழ்க்கைக்கு ஒளியேற்றும் என்கிற இலட்சியப் பார்வையுடன் கழக மேடைகளிலும், விழா அரங்குகளிலும் கைத்தறித் துண்டு அணிவிக்கும் வழக்கம் தொடர்ந்தது.

    கைத்தறி நெசவாளர்களின் வாழ்வு வளம் பெறுவதற்காக பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி, பேராசிரியர் உள்ளிட்ட கழக முன்னோடிகள் தோளில் சுமந்து தெருத் தெருவாக கைத்தறித்துணிகளை விற்று, அதன் மூலம் கிடைத்த தொகையை நெசவாளர்களுக்கு வழங்கிய பெருமையும் இந்த இயக்கத்திற்கு உண்டு.

    காலத்திற்கேற்ற மாற்றங்களின் காரணமாக, தமிழர்களின் உடைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, தோளில் துண்டு அணியும் வழக்கம் குறைந்துவிட்டது. அவரவர் வசதிக்கேற்ற உடைகளை அணியும் சுதந்திரம் மேலோங்கிவிட்ட சூழலில், விழா நாட்களிலும் மேடைகளிலும் சால்வை என்ற பெயரில் பயனற்ற துணியை அணிவிப்பது என்பது பொருளற்ற செயலாக அமைந்துவிடுகிறது. பகட்டான இந்தப் பழக்கத்தைத் தவிர்த்து, கால மெல்லாம் பயனுள்ள வகையில் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கும் பழக்கத்தை மீண்டும் புதுப்பித்துப் பின் பற்றுவோம்.

    கழகத்தினர் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்கள் தொடங்கி பலவற்றிலும் புத்தகங்களைப் பரிசளித்து, படிக்கும் பழக்கத்தை சமுதாயத்தில் பரவலாக்கிப் பெருக்கிய பெருமை தி.மு.கழகத்திற்கு உண்டு.

    ஊர்தோறும்-தெரு தோறும் படிப்பகங்களை உருவாக்கி பொதுமக்களின் அறிவுப் பசிக்கு புத்தகங்கள் வாயிலாகவும் பத்திரிகைகள் வாயிலாகவும் நல்விருந்து பரிமாறிய இயக்கம் நம் தி.மு.கழகம். அதன் தொடர்ச்சியாக, கழகத்தால் பல நூலகங்கள் உருவாக்கப்பட்டன. தலைவர் கருணாநிதியின் பெரு முயற்சியால், மிகப் பெரிய நூலகமான உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கப்பட்டதுடன், உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்த போது, ஊராட்சிகள் தோறும் நூலகங்கள் தொடங்கப்பட்டன. அவை அனைத்தையும் இழுத்து மூடி முடக்கிய இருளடைந்த ஒரு ஆட்சி இப்போது தமிழகத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்றாலும், அந்த அரசியலைப் பேச இது தருணமல்ல என்பதால், ஆற்ற வேண்டிய நம்பணி குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    அறிவாற்றல் மிக்க இளைய சமுதாயம் தமிழகத்தில் உருவாகியுள்ள நிலையில், அதனை மேலும் பரவலாக்கிக் கூர்மைப்படுத்தவும், தமிழகத்தின் வரலாற்றுப் பெருமையையும் உலகளாவிய நிலைமைகளையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வகையிலும் புத்தகங்கள் துணை நிற்கின்றன. எனவே, என் பிறந்தநாளில் நேரில் சந்தித்து அன்பை வெளிப்படுத்த நினைக்கும் கழகத்தினர் யாரும் சால்வை அணிவிக்காமல், புத்தகங்களை அளிக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.

    நீங்கள் வழங்கும் புத்தகங்களில் எனது அறிவை மேலும் விசாலப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு, மிகுதியாக சேரும் புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல நூலகங்களுக்கும் கொடுத்து உதவி, அதன் மூலம் தமிழக இளைஞர்கள்மகளிர் உள்ளிட்ட அனைவரும் அளவிலாப் பயன்பெறச் செய்ய முடியும்.

    என் அன்பு வேண்டுகோளை எப்போதும் ஏற்று கண்டிப்பாக கடைப்பிடிக்கும் கழகத்தினர் இந்த வேண்டுகோளையும் ஏற்று, சால்வைபொன்னாடை போன்ற பகட்டான பரிசுகளைத் தவிர்த்து, மார்ச் 1 ஆம் தேதி இளைஞர் எழுச்சி நாள் முதல் தொடர்ந்து நல்ல புத்தகங்களை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் உங்களில் ஒருவன் என்ற உரிமையுடன் என்னுடைய இந்தக் கோரிக்கையை நீங்கள் இன்முகத்தோடு ஏற்று செயல்படுவீரெனில், அதைவிட உயர்ந்த பிறந்த நாள் பரிசு எனக்கு வேறேதும் உண்டோ.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×