search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொகுதி செயலாளர் ஜான்.
    X
    தொகுதி செயலாளர் ஜான்.

    திருப்பூர் அ.தி.மு.க. கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. பிரமுகர் வெளிநடப்பு

    திருப்பூர் அ.தி.மு.க. கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. பிரமுகர் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா குறித்த ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தன் தலைமை தாங்கி பேசினார். இதைதொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் பேசினர்.

    அப்போது திருப்பூர் வடக்கு தொகுதி செயலாளரும், முன்னாள் மண்டல தலைவருமான ஜான் பேசினார். அவர் பேசும் போது, ‘‘கட்சியில் சசிகலாவின் தலைமை தொண்டர்களுக்கும், பொது மக்களுக்கும் பிடிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் பொதுமக்களிடம் சென்றால் விரட்டியடிப்பார்கள்’ என்று ஆவேசத்துடன் கூறினார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத மற்ற நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் தொகுதி செயலாளர் ஜான், கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியே சென்று விட்டார். இந்த சம்பவத்தால் அ.தி.மு.க. கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தொகுதி செயலாளர் ஜான் கூறியதாவது:-

    சசிகலா தலைமையை கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்களும், பொது மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. திருப்பூரை பொறுத்தவரை 75 சதவீத நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு தான் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    நான் எனது வார்டு மக்களிடம், தொண்டர்களிடம் கருத்துகளை கேட்ட பிறகு முடிவு செய்துள்ளேன். தற்போது எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சுயலாபத்துக்காக சசிகலாவை ஆதரித்து வருகிறார்கள்.

    பூத் ஏஜெண்ட்டுகள், வீடு- வீடாக கொடி பிடித்து ஓட்டு கேட்க சென்ற தொண்டர்களின் உணர்வுகளை எம்.எல்.ஏ.க்கள் மதிக்கவில்லை. வருகிற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு கேட்டு சென்றால் மக்கள் விரட்டியடிப்பார்கள். எம்.எல்.ஏ.க்களுக்கு தைரியம் இருந்தால் பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று காட்ட முடியுமா?

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×