search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணா கால்வாயில் மீண்டும் தண்ணீரை திருடும் ஆந்திர விவசாயிகள்
    X

    கிருஷ்ணா கால்வாயில் மீண்டும் தண்ணீரை திருடும் ஆந்திர விவசாயிகள்

    மோட்டார்கள்மூலம் கிருஷ்ணா நதி கால்வாயில் மீண்டும் ஆந்திர விவசாயிகள் தண்ணீரை திருடி வருகின்றனர்.
    ஊத்துக்கோட்டை:

    புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து வருகிறது. இந்த 4 ஏரிகளில் இருப்பில் உள்ள தண்ணீரை கொண்டு சென்னையில் 39 நாட்கள் வரைதான் குழாய்களில் தண்ணீர் வினியோகிக்க முடியும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

    இதனால் சென்னை மாநகரத்தில் கோடையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கண்டலேறு அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் பூண்டிக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

    கடந்த மாதம் 21-ந் தேதி முதல் சராசரியாக வினாடிக்கு 450 கனஅடி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. இன்று காலை பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 311 கனஅடியாக குறைந்தது.

    இது ஒருபுறம் இருக்க தமிழக எல்லையில் ஊத்துக்கோட்டை அருகே ஆந்திராவில் உள்ள மதனஞ்சேரி, ஆம்பாகம், பேரடம், சிறுவணம்புதூர், என்.எம்.கண்டிகை, ஜங்காள பள்ளி பகுதிகளில் உள்ள விவசாயிகள் கிருஷ்ணா நதி கால்வாய் ஓரங்களில் உள்ள முட்புதர்களில் மோட்டார்களை அமைத்து இரவு நேரங்களில் தண்ணீரை திருடி வயல்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.

    இதனால் கிருஷ்ணா நதி கால்வாயில் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. இந்த தண்ணீர் திருட்டை தடுக்க தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப் பணித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பூண்டி ஏரி உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி அணையில் நீர் மட்டம் 24.91 அடியாக பதிவாகியது. 833 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு கிருஷ்ணா நதி நீர் வினாடிக்கு 311 கனஅடி விதம் வந்து கொண்டிருந்தது.

    பூண்டியிலிருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் வினாடிக்கு 380 கனஅடி, சென்னை மெட்ரோ வாட்டர் போர்டுக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    Next Story
    ×