search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 100 பேர் அனுமதி: இதுவரை 20 பேர் பலி
    X

    அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 100 பேர் அனுமதி: இதுவரை 20 பேர் பலி

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 20 பேர் பலியாகி உள்ளனர்.
    கோவை:

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பன்றி காய்ச்சல் பாதிப்புடன் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் வரை பன்றி காய்ச்சலுக்கு 19 பேர் பலியாகி இருந்தனர்.

    இந்த நிலையில் கோவை பீளமேட்டை சேர்ந்த அப்துல் காதர் (வயது 67) என்பவர் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கடந்த 15 நாட்களாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

    இதே போல மூளை காய்ச்சல் பாதிப்புடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராமசாமி (60) என்பவர் சிக்ச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாமாக இறந்தார்.

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த 100 பேர் பன்றி காய்ச்சல் பாதிப்புடன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு சிறப்பு வார்டில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    மேலும் மர்ம காய்ச்சலுக்கு 44 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 6 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பன்றி, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவாமல் தடுக்க கோவை மாவட்ட சுகாதார துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவினர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் வீடுகளுக்கு சென்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு தடுப்பூசி, தடுப்பு மாத்திரைகள் வழங்கி பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×