search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்
    X

    ஊட்டியில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு: கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம்

    ஊட்டி காந்தலில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    காந்தல்:

    ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ் (வயது 25). இவரது மனைவி ராபியா. இவர்களுக்கு நிசாரா என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை நிசாரா திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை. இதைதொடர்ந்து குழந்தை மாயமானது குறித்து ஊட்டி நகர மேற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    முதல் கட்ட விசாரணையில் சம்பவத்தன்று இரவு ராபியா வீட்டுக்கு பர்தா அணிந்த பெண் ஒருவர் வந்து, வாடகைக்கு வீடு உள்ளதா? என்று விசாரித்தார். பின்னர் சிறிதுநேரத்தில் அவர் சென்று விட்டார். எனவே பர்தா அணிந்த பெண் தான் குழந்தையை கடத்தி சென்றிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்து வந்தனர்.

    இதனால் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உத்தரவின் பேரில் 3 தனிப் படைகள் அமைத்து குழந்தை தேடுதல் வேட்டை தொடங்கியது.

    இதற்கிடையே ஊட்டி மேரீஸ்ஹில் பகுதியில் ஒரு வீட்டில் கடத்தப்பட்ட பெண் குழந்தை இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெண் குழந்தை இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். பின்னர் வீட்டில் இருந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த பெண் அப்துல் ரகீம் என்பவரது மனைவி பவுசியா (32) என தெரிய வந்தது. குழந்தையை பவுசியா தான் கடத்தினார் என்பதும் தெரிய வந்தது.

    பின்னர் போலீசார், குழந்தை நிசாராவை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கடத்திய பவுசியாவை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    முன்னதாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்ல முயன்ற போது அப்பகுதியை சேர்ந்த மக்கள், ஆத்திரத்தில் பவுசியாவை தாக்க முயற்சித்தனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து பவுசியாவை பத்திரமாக மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    அப்போது அவர் போலீசாரிடம் தெரிவித்ததாவது:-



    எனது கணவர் அப்துல் ரகீம் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். எனக்கு 2 மகன்கள் உள்ளனர். பெண் குழந்தை இல்லை. சம்பவத்தன்று ராபியா வீட்டுக்கு சென்று வாடகை வீடு தொடர்பாக பேச்சு கொடுத்தேன்.

    அப்போது குழந்தை நிசாராவை பார்த்தேன். மிகவும் அழகாக இருந்ததால் எனக்கு பிடித்து போனது. இதனால் பெண் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த நான் குழந்தையை கடத்தினேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே குழந்தை கடத்திய பவுசியாவுக்கு குழந்தைகள் கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம்? என அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். அதன்பேரிலும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×