search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு போர்டு.
    X
    போராட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு போர்டு.

    ஜெ.தீபா பேரவை ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு

    கோவையில் இன்று நடைபெற இருந்த ஜெ.தீபா பேரவை ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டது. இதனால் தீபா பேரவை தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    கோவை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை செய்யக்கோரி ஜெ.தீபா பேரவை சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    கோவை மாநகர், புறநகர் மாவட்ட ஜெ.தீபா பேரவை சார்பில் இந்த ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மலரவன், ரோகிணி ஆகியோர் செய்திருந்தனர்.

    ஆனால் திடீரென இந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டது. இதனால் தீபா பேரவை தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ.மலரவன் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி இன்று ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டு கடந்த 13-ந் தேதியே கடிதம் கொடுத்தோம். அப்போது போலீசார் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

    திடீரென நேற்று இரவு போலீசார் போன் செய்து ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கிடையாது என்கிறார்கள். இதனால் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்துள்ளோம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வேறொரு நாளில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த தெற்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து சிறிது தூரத்திலேயே மாவட்ட அ.தி. மு.க. அலுவலகமான இதய தெய்வம் மாளிகை உள்ளது. ஆர்ப்பாட்டம் காரணமாக அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், ஜெ.தீபா பேரவையினருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு, அசாதாரண நிலை உருவாகி விடக்கூடாது என கருதியே ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்ட போது, தற்போதைய சூழலில் ஆர் பாட்டம் நடத்த வேண்டாம் என கூறினோம். அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதாக தெரிவித்தனர் என்று கூறினர்.
    Next Story
    ×