search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூண்டில் சிக்கிய சிறுத்தையை படத்தில் காணலாம்
    X
    கூண்டில் சிக்கிய சிறுத்தையை படத்தில் காணலாம்

    கடையம் அருகே இன்று அதிகாலை சிறுத்தை மீண்டும் கூண்டில் சிக்கியது

    கடையம் அருகே வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் வைத்திருந்த கூண்டில் இன்று அதிகாலை ஒரு சிறுத்தை சிக்கியது.
    கடையம்:

    நெல்லை மாவட்டம் கடையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கடனா நதி அணை அடிவார பகுதியில் பெத்தான் பிள்ளை குடியிருப்பு அமைந்துள்ளது. வனப்பகுதியிலிருந்து கரடி, மிளா, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி இக்கிராமத்துக்குள் புகுந்து விவசாய நிலங்களை நாசம் செய்து விடுகிறது.

    அதே போல சிறுத்தைகளும் ஊருக்குள் நுழைந்து ஆடு, மாடு, நாய்களை கொன்று தூக்கி சென்று விடுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக இந்த பகுதியில் சிறுத்தைகள் புகுந்து 100-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, நாய்களை தூக்கி சென்று விட்டன.

    இதையடுத்து வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தைகளை பிடிக்க நடவடிக்கை எடுத்ததில் இதுவரை இப்பகுதியில் 4 சிறுத்தைகள் பிடிபட்டுள்ளன. கடைசியாக கடந்த மாதம் 31-ந்தேதி இரவில் வனத்துறையினர் வைத்த கூண்டில் 4 வயது ஆண் சிறுத்தை ஒன்று பிடிப்பட்டது.

    இந்நிலையில் கடந்த வாரம் பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியை சேர்ந்த விவசாயி சங்கர் என்பவரது வீட்டின் பின்புறம் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. திடீரென அந்த சிறுத்தை சங்கர் வீட்டு மாட்டு தொழுவம் அருகே கட்டப்பட்டிருந்த ஆட்டை கடித்து கொன்று மாமிசத்தை தின்று விட்டு தப்பி விட்டது.

    பின்னர் காலையில் எழுந்த சங்கர் ஆட்டை சிறுத்தை அடித்து கொன்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கடையம் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அங்கு சிறுத்தையின் கால் தடங்கள் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைத்தனர். அந்த கூண்டில் இன்று அதிகாலை ஒரு சிறுத்தை சிக்கியது. இது 10 வயது உள்ள பெண் சிறுத்தை ஆகும். இதையடுத்து முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஜெயராஜ், கடையம் வனச்சரகர் இளங்கோ மற்றும் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்றனர். சிறுத்தையை காரையாறு வனப்பகுதிக்குள் கொண்டு விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் இதுவரை 5 சிறுத்தைகள் சிக்கியுள்ளன. மேலும் பல சிறுத்தைகள் அந்த பகுதியில் உள்ளதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். தொடரும் சிறுத்தை அட்டகாசத்திற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    Next Story
    ×