search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எழிலரசி
    X
    எழிலரசி

    வி.எம்.சி.சிவக்குமாருக்கு கொலை மிரட்டல் வழக்கு: எழிலரசியிடம் போலீசார் விசாரணை

    முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக எழிலரசியிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
    காரைக்கால்:

    புதுவை முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் காரைக்கால் திருப்பட்டினத்தில் வசித்து வந்தார். அவருக்கும் சாராய வியாபாரி ராமுவுக்கும் இடையே தொழில் ரீதியாக நட்பு ஏற்பட்டது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

    இதையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு ராமு படுகொலை செய்யப்பட்டார். ராமு கொலைக்கு காரணமானவர்களை தீர்த்துக்கட்டுவேன் என்று ராமுவின் 2-வது மனைவி எழிலரசி சபதம் செய்தார். அதன்படி ராமுவுக்கு நண்பராக இருந்து எதிரியாக மாறிய அய்யப்பன் மற்றும் ராமுவின் முதல் மனைவி வினோதா ஆகியோர் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர்19-ந் தேதி பிற்பகல் 2 மணியளவில் வி.எம்.சி.சிவக்குமாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பெண் ஒருவர் பேசினார்.

    அப்போது அவர் என் கணவரின் சொத்துக்களை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் எனவே நீங்கள் மாதந்தோறும் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறினார்.

    ராமுவின் 2-வது மனைவி எழிலரசிதான் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திருப்பட்டினம் போலீசில் வி.எம்.சி. சிவக்குமார் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துஎழிலரசியை தேடி வந்தனர். அவர் தலைமறைவாகிவிட்டார்.

    இதற்கிடையே கடந்த மாதம் 3-ந் தேதி நிரவியில் வி.எம்.சி.சிவக்குமார் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கிலும் எழிலரசியை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் எழிலரசி கோர்ட்டில் சரணடைந்தார். விசாரணை முடிந்ததும் புதுவை காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    மேலும் வி.எம்.சி.சிவக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் எழிலரசியை காவலில் எடுத்து விசாரிக்க திருப்பட்டினம் போலீசார் காரைக்கால் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.

    எழிலரசியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார். அதன்படி எழிலரசியை காவலில் எடுத்தனர். நேற்று மாலை 5 மணிக்கு காலாப்பட்டு சிறையில் இருந்து காரைக்கால் திருப்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

    வி.எம்.சி.சிவக்குமாருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக எழிரசியிடம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தினார். பின்னர் பெண் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விடிய, விடிய விசாரணை நடைபெற்றது.

    அப்போது போலீசாரிடம் எழிலரசி பல்வேறு தகவல்களை கூறியிருப்பதாக தெரிகிறது. விசாரணை முடிந்து இன்று மாலை 5 மணிக்கு காரைக்கால் கோர்ட்டில் எழிலரசி ஆஜர்படுத்தப்படுகிறார். கோர்ட்டு முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×