search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா உள்பட 3 பேர் கோர்ட்டில் சரண்: தமிழக - கர்நாடக எல்லையில் போலீஸ் குவிப்பு
    X

    சசிகலா உள்பட 3 பேர் கோர்ட்டில் சரண்: தமிழக - கர்நாடக எல்லையில் போலீஸ் குவிப்பு

    சசிகலா உள்பட 3 பேர் இன்று கோர்ட்டில் சரணடைய உள்ளதால் பெங்களூரு தனி கோர்ட்டில் இருந்து கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளி சுங்கசாவடி வரை ஓசூர் சாலையில் கர்நாடக போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    ஓசூர்:

    தமிழக கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் ஓசூர் அமைந்துள்ளது. பெங்களூருவில் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடக்கும் போதெல்லாம் இங்கு பரபரப்பாகவே காணப்படும்.

    சொத்து குவிப்பு வழக்கு

    குறிப்பாக கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேருக்கு சிறை தண்டனை வழங்கி பெங்களூரு தனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதால் அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அப்போது தமிழக-கர்நாடக மாநில எல்லைப்பகுதி மிகுந்த பரபரப்பாக காணப்பட்டதால் சில நாட்கள் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக இரு மாநில போலீசாரும் மாநில எல்லையில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    ஆனால், நேற்றைய தினம் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும் கர்நாடக மாநில தனி கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. அப்போது இரு மாநில அரசு பஸ்கள், மற்றும் வாகனங்களும் வழக்கம் போல இயங்கின. கடைகளும் வழக்கம் போல திறக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் இன்று பெங்களூரு தனி கோர்ட்டில் சரண் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதையடுத்து பெங்களூரு தனி கோர்ட்டில் இருந்து கர்நாடக-தமிழக எல்லையான அத்திப்பள்ளி சுங்கசாவடி வரை ஓசூர் சாலையில் கர்நாடக போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல ஓசூரிலும் தமிழக போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
    Next Story
    ×