search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி வைக்கப்பட்டு இருந்த காட்சி (பழைய படம்)
    X
    ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி வைக்கப்பட்டு இருந்த காட்சி (பழைய படம்)

    சிவன்மலை கோவில் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி வைத்ததால் சசிகலாவுக்கு ஜெயில்

    சிவன்மலை கோவில் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி வைத்ததால் சசிகலாவுக்கு ஜெயில் தண்டனை கிடைத்தது என அப்பகுதியில் வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    காங்கயம்:

    காங்கயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டவன் உத்தரவு பெட்டி கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ளது.

    இதில் பக்தர்களின் கனவில் ஏதாவது ஒரு பொருள் வந்தால் அந்த பொருளை கோவில் நிர்வாகத்திடம் தெரிவிப்பார்கள். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் சுவாமி சன்னதியில் சிவப்பு, வெள்ளை என 2 பூக்கள் வைத்து உத்தரவு கேட்கப்படும். அதில் வெள்ளைப்பூ வந்தால் மட்டுமே பக்தரின் கனவில் வந்த பொருள் இரும்பு பெட்டியில் வைக்கப்படும்.

    அதன்பின்னர் இரும்பு பெட்டியில் வைக்கப்பட்ட பொருளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்த நடைமுறை சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.

    கடந்த ஆண்டில் ஒரு பக்தரின் கனவில் கணக்கு நோட்டு வந்தது. இதையொட்டி கோவிலில் இரும்பு பெட்டியில் கணக்கு நோட்டு வைக்கப்பட்டது,

    இதனால் நாட்டில் கணக்கில் வராத கருப்பு பணம் வெளியே வரும் என கூறப்பட்டது. அதேபோல் பிரதமர் மோடியின் செல்லாத நோட்டுகள் அறிவிப்பால் கணக்கில் வராத பணம் வெளியே கொண்டு வரப்பட்டதை கண்டு பக்தர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி தாராபுரம் அருகே உள்ள கொங்கூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவராம் என்ற பக்தரின் கனவில் இரும்பு சங்கிலி வந்தது. இதனால் கோவில் நிர்வாகம் சார்பில் பூ வைத்து உத்தரவு பெறப்பட்டு இரும்பு சங்கிலி வைக்கப்பட்டது.

    இதனால் நாட்டில் உள்ள அரசியல்வாதிக்கு சிறை தண்டனை கிடைக்கும் என பக்தர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

    அதை உறுதிப்படுத்தும் விதமாக சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.

    சிவன்மலை கோவில் உத்தரவு பெட்டி இரும்பு சங்கிலி வைக்கப்பட்டதால் தான் சசிகலாவுக்கு சிறை தண்டனை கிடைத்ததாக பக்தர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆண்டவரின் உத்தரவுப்படி சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி அப்பகுதியில் வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×