search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி
    X

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 3 குழந்தைகளுடன் தாய் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கினார்.

    செங்கம் தாலுகா சி.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி ரமணி (வயது 35) 3 குழந்தைகளுடன் சென்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தார். பின்னர் கலெக்டர் கூட்டரங்கை விட்டு வெளியே வந்த ரமணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து திடீரென மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை தனது 3 குழந்தைகள் மற்றும் தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

    இதைக்கண்டு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தீக்குளிக்க முயன்ற ரமணியை தடுத்து நிறுத்தி 3 குழந்தைகள் மற்றும் ரமணியை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமணி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் செங்கம் தாலுகா சி.நம்மியந்தல் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக எனது கணவர் முருகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். எனது கணவர் உயிரோடு இருக்கும் போது கலசபாக்கம் தாலுகா நாயுடுமங்கலம் கிராமத்தில் அவருக்கு சொந்தமான ½ ஏக்கர் விவசாய நிலத்தை அவரது பெற்றோரின் சம்மதத்துடன் எனது பெயருக்கு எழுதி கொடுத்தார்.

    எனது கணவர் இறந்த சில மாதங்களில் எனது கணவரின் பெற்றோர் என்னை ஏமாற்றி நிலத்தை அபகரித்து கொண்டனர். மேலும் எனது பெயரில் உள்ள பட்டாவையும் முறைகேடான முறையில் அவர்களது பெயரில் மாற்றி உள்ளார்கள். எனது கணவர் எனக்கு எழுதி தந்த நிலத்தையும், அதன் பட்டாவையும் முறைகேடாக மாற்றி எடுத்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது கணவர் எழுதி தந்த நிலம் மற்றும் பட்டாவை எனக்கு பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
    Next Story
    ×