search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி-கொடைக்கானல் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு ரேக்ளா பந்தயம்
    X

    பழனி-கொடைக்கானல் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு ரேக்ளா பந்தயம்

    திண்டுக்கல் மாவட்டம் பழனி, கொடைக்கானல் மற்றும் நத்தத்தில் தடையை மீறி ரேக்ளா ரேஸ், ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
    பழனி:

    ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பழனி அருகே உள்ள வயலூரில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது.


    இதில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் அவர்களே ரேக்ளா ரேசிலும் கலந்து கொண்டனர். 20-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்று வயலூர் முதல் மடத்துக்குளம் வரையில் பந்தயம் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இது தவிர இப்பகுதி கிராம மக்கள், குழந்தைகள், பெரியவர்கள் ஒன்றுகூடி ஆடு, கோழி, மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொடைக்கானல் அருகில் உள்ள மேல்மலை கிராமமான பூம்பாறையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஊருக்குள் விரட்டி விடப்பட்ட காளைகளை 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு பிடித்தனர். பூம்பாறை, வில்பட்டி, மன்னவனூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் இதனை கண்டு ரசித்தனர்.

    நத்தம் அருகே கோவில் பட்டியில் கைலாச நாதர் கோவில் முன்பு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. கோவில் முன்பாக வாடிவாசல் அமைக்கப்பட்டு 40-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மாடு பிடி வீரர்கள் இளைஞர்கள் அந்த காளைகளை அடக்கினர். மேலும் நத்தம் அருகில் உள்ள சொறிப்பாறைப்பட்டி, சங்கரன்பாறையிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டு இளைஞர்கள் உற்சாகத்துடன் அதனை அடக்கினர்.
    Next Story
    ×