search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டிவனத்தில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டம்: எம்.எல்.ஏ.க்கள் உள்பட 300 பேர் கைது
    X

    திண்டிவனத்தில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டம்: எம்.எல்.ஏ.க்கள் உள்பட 300 பேர் கைது

    திண்டிவனத்தில் தி.மு.க.வினர் நடத்திய ரெயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருக்கோவிலூர்:

    ஜல்லிக்கட்டு நடத்த அவரச சட்டம் பிறப்பிக்கக் கோரி தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திண்டிவனம் ரெயில் நிலையம் முன்பு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் இன்று காலை 9.15 மணியளவில் திரண்டனர்.

    பின்னர் ரெயில் நிலையத்துக்குள் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ரெயில் மறியல் போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேதுநாதன், செந்தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் கபிலன், வக்கீல்கள் அசோகன், முத்து, ஆதித்தன், டாக்டர் சேகர், ஒன்றிய செயலாளர் ராஜாராம் மற்றும் செல்வராஜ், வந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    மறியல் போராட்டத் தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினார்கள். பின்னர் ½ மணி நேரம் தாமதத்திற்கு பிறகு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது.

    இதேநேரத்தில் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றொரு தண்டவாளத்தில் அங்கு வந்தது. அந்த ரெயிலை தலைமையில் தி.மு.க.வினர் மறித்தனர்.

    இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ், இன்ஸ் பெக்டர்கள், மைக்கல் இருதயராஜ், ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் செஞ்சி மஸ்தான், மாசிலாமணி, சீதாபதி சொக்கலிங்கம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர். ரெயில் நிலையத்தில் இருந்த அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி பஸ்சில் ஏற்றிச்சென்றனர்.

    திருக்கோவிலூர் தொகுதி தி.மு.க.சார்பில் அதன் நிர்வாகிகள் அரகண்டநல்லூரில் உள்ள ரெயில்நிலையத்தை நோக்கி இன்று காலை ஊர்வலமாக வந்தனர். தொகுதி பொறுப்பாளர் டி.என்.முருகன் தலைமை தாங்கினார்.

    ஊர்வலத்தில் ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் தடையை மீறி ரெயில் நிலையத்துக்குள் சென்றனர்.

    ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மத்திய அரசுக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

    Next Story
    ×