search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி திண்டுக்கல்லில் தி.மு.க.வினர் ரெயில் மறியல்
    X

    ஜல்லிக்கட்டு தடையை நீக்க கோரி திண்டுக்கல்லில் தி.மு.க.வினர் ரெயில் மறியல்

    ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி திண்டுக்கல்லில் தி.மு.க.வினர் இன்று ரெயில் மறியல் செய்தனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். அதற்கான தடையை நீக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியாவின் எதிர்காலம் என வர்ணிக்கப்படும் மாணவர் சமுதாயம் நேரடியாக களத்தில் குதித்துள்ளதால் அரசியல் கட்சியினரே மிரண்டு போய் உள்ளனர். போராட்டத்துக்குள் எந்த ஒரு அரசியல் அமைப்பை சார்ந்தவர்களையும் மாணவர்கள் அனுமதிக்கவில்லை.

    திண்டுக்கல்லில் இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது. எனினும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் ஐபெரியசாமி தலைமையில் தி.மு.க.வினர் இன்று காலை ஒன்று திரண்டனர். அவர்கள் திடீரென ஊர்வலமாக திண்டுக்கல் ரெயில் நிலையம் புறப்பட்டு வந்தனர்.

    அப்போது திண்டுக்கல்லில் இருந்து காலை 7.50 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் கிளம்ப தயாராக இருந்தது. இந்த ரெயில் மதுரையில் இருந்துதான் புறப்பட்டு வரும். மதுரையில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் இந்த ரெயில் திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    ரெயிலுக்கு சிக்னல் விழுந்ததும் தி.மு.க.வினர் திடீரென தண்டவளாத்தில் இறங்கி ரெயிலை மறித்தனர். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து ரெயிலை எங்கும் நகர விடாமல் போராட்டம் செய்து வருகிறார்கள்.

    இந்த போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., செந்தில்குமார் எம்.எல்.ஏ., நத்தம் தொகுதி எம்.எல்.ஏ. ஆண்டிஅம்பலம் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×