search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமக்கல்லில் செல்போன் டவரில் ஏறி மாணவர்கள் போராட்டம்
    X

    நாமக்கல்லில் செல்போன் டவரில் ஏறி மாணவர்கள் போராட்டம்

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2 மாணவர்கள் நாமக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.எல்.செல்வோன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    நாமக்கல்:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2 மாணவர்கள் நாமக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.எல்.செல்வோன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் வேல்முருகன் (22), கவின்ராம் ஆகிய 2 பேரும் இன்று காலை எருமப்பட்டியில் இருந்து நாமக்கல் வந்தனர்.

    அவர்கள் நாமக்கல்லில் மோகனூர் ரோட்டில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் உள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்று வற்புறுத்தியும் அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள். 10 மணிக்கு பிறகும் அவர்கள் டவரில் இருந்து இறங்காமல் கோ‌ஷம் எழுப்பியவாறு இருந்ததால் பதட்டம் ஏற்பட்டது. அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல் லத்துவாடியில் உள்ள அறிஞர் அண்ணா கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல் நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று நாமக்கல் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம் கோரிமேட்டில் உள்ள சேலம் மத்திய சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என்று வற்புறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டும் என்று வற்புறுத்தியும் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரிகள் இயங்கவில்லை. இந்த தனியார் கல்லூரிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி ராசிபுரம் ஆண்டகலூர் கேட் பக்கத்தில் இயங்கி வரும் அரசு கலை கல்லூரி அருகில் இன்று காலை முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களில் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி முன்பு இன்று திரண்டனர். அவர்கள் கல்லூரி முன்பு அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்தி அனுமதி வேண்டும், அனுமதி வேண்டும், தடை செய், தடை செய் பீட்டா அமைப்பை தடை செய் என்ற கோ‌ஷங்களை மாணவர்கள் எழுப்பினர். மேலும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு இருந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. சுரேஷ்குமார், ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்குமாறு போலீசார் வலியுறுத்தினர்.

    தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று கல்லூரி முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள்.



    தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரி பகுதியில் இன்று காலை கூடிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷம் எழுப்பினார்கள். ஜல்லிக்கட்டை நடத்த மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டங்கள் கொண்டு வரவேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள்.
    Next Story
    ×