search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காந்தி சிலைமுன் திரண்ட மாணவர்களிடம் இன்ஸ்பெக்டர் மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
    X
    காந்தி சிலைமுன் திரண்ட மாணவர்களிடம் இன்ஸ்பெக்டர் மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலம்- ஆர்ப்பாட்டம்

    தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாணவர்களும் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு இன்று காலை சிதம்பரம் பஸ்நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன் திரண்டனர்.

    ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தயாரானார்கள். தகவல் அறிந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நிஷா, இன்ஸ்பெக்டர் மோகன் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

    போராட்டம் நடத்த தயாரான மாணவர்களிடம் இன்ஸ்பெக்டர் மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார். காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று தெரிவித்தார். பல்கலைக்கழகத்துக்கு செல்லுங்கள் என்று அறிவுறுத்தினார்.

    ஆனால் மாணவர்கள் தொடர்ந்து அங்கே நின்று கொண்டிருந்தனர். பின்னர் மாணவர்கள் அங்கிருந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு சென்றனர்.

    பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி மற்றும் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அவர்கள் கறுப்பு சட்டை அணிந்திருந்தனர்.



    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை கையில் ஏந்தி வந்தனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியதால் கைதான மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×