search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக விவசாயிகள் அவல நிலைக்கு மத்திய அரசிடம் நீதி கேட்டு நாளை உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன்
    X

    தமிழக விவசாயிகள் அவல நிலைக்கு மத்திய அரசிடம் நீதி கேட்டு நாளை உண்ணாவிரதம்: பி.ஆர்.பாண்டியன்

    தமிழக விவசாயிகள் அவல நிலைக்கு மத்திய அரசிடம் நீதி கேட்டு நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
    மன்னார்குடி:

    தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்துக்கே உணவளித்து வந்தோரை வாழவைத்த விவசாயிகள் சர்க்கரை பொங்கலிடுவதற்கு ஒரு படி புத்தரிசிக்கு வழியில்லை.

    பொங்கலன்று சூரியனுக்கு படையலிட்டு வணங்குவதற்காக வைக்க தன் நிலத்தில் விளைவித்த ஒருபிடி கதிருக்கு வழியில்லாமல் பயிர்கள் முற்றிலும் கருகி காவிரி டெல்டா பாலைவனமாக காட்சியளிக்கிறது.

    நிலத்தடி நீர் வறண்டதால் குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஏரி,குளம், குட்டைகள் வறண்டதால் கால்நடைகள் குடிநீரின்றி பரிதவிக்கின்றன. இதை கண்டு மனமுடைந்து 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

    இந்த அவல நிலைக்கு மத்திய அரசே முழுபொறுப்பேற்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு ஏற்க மறுத்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே விவசாயிகளின் இந்த நிலைக்கு காரணமான மத்திய அரசிடம் நீதி கேட்டும், தமிழக அரசு கோரும் நிதி முழுவதையும் மத்திய அரசு தரக் கோரியும் பொங்கலன்று (நாளை ) மத்திய அரசிடமும், பிரதமர் மோடியிடமும் நீதி கேட்டு திருவாரூர் ரெயில் நிலையம் எதிரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×