search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: விவசாய சங்கத்தினர் வலியுறுத்தல்
    X

    தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்: விவசாய சங்கத்தினர் வலியுறுத்தல்

    தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்படும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 5,465 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த தொகை போதுமானதாக இல்லை என விவசாயிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன்:-

    தமிழக அரசு 32 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். ஏற்கனவே கடந்த 2012-13 -ல் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உற்பத்தி செலவை இழப்பீடாக கணக்கிட்டு ரூ. 15 ஆயிரம் வழங்கினார். ஆனால் தற்போது எதையும் கணக்கில் கொள்ளாமல் ஏக்கருக்கு ரூ. 5,465 என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பயிர்கடனை, மத்திய கால கடனாக மாற்றி அறிவித்திருப்பது விவசாயிகளை மேலும் கடனாளியாக மாற்றும் நடவடிக்கையாகத் தான் அமையும்.

    வறட்சி பாதிக்கப்பட்டு 120-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ள நிலையில் வெறும் 17 விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழக முதல்வர் தற்போதைய அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    விமல்நாதன் (தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர்):-

    இது வரலாறு காணாத வறட்சி. வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்க தக்கது. அதே சமயம் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீட்டு தொகை மிக, மிக குறைவாக இருக்கிறது.

    மாநில அரசு ஏற்கனவே ஏக்கருக்கு பயிர் கடனாக ரூ. 25 ஆயிரம் வழங்கி உள்ளது. எனவே குறைந்த பட்சம் அரசு வழங்கியுள்ள கடன் தொகையான ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் கணக்கிட்டு தமிழக அரசு வழங்க வேண்டும்.

    உயிரிழந்த விவசாயிகளுக்கு ரூ. 3 லட்சம் என்பது மிக குறைவு. தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை குறித்து தரப்பட்டுள்ள புள்ளி விவரம் தவறானதாக இருக்கிறது. எனவே இந்த அறிவிப்புகளை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

    சாமி. நடராஜன் ( தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர்):-

    தமிழ்நாடு முழுவதும் வறட்சி என சொல்லியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் நெல் பயிர் பாதிப்புக்கான நிவாரணம் போதுமானது அல்ல. விவசாயிகளின் இறப்பு எண்ணிக்கை 130 -ஐ கடந்து விட்ட நிலையில் 17 பேர் மட்டுமே உயிர் இழந்து இருப்பதாக கூறியிருப்பது சரியானதல்ல.

    மத்திய காலகடான மாற்றியிருப்பது விவசாயிக்கு பயனில்லை. அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    ஜீவக்குமார் (அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட துணைத் தலைவர்):-

    தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை போதுமானதல்ல. கல்லணை பகுதியில் ஆந்திரா பொன்னிக்கு ஆற்றில் ஊற்று அமைத்து குழாய் போட்டு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

    டீசல் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ. 150 என உள்ளது.6 மணி நேரத்துக்கு ஏறத்தாழ ரூ. ஆயிரம் செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு 10 முறை தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

    தண்ணீர் பாய்ச்சுவதற்கு மட்டும் விவசாயிகள் ரூ. 5 ஆயிரம் வரை செலவு செய்துள்ளனர். இந்த நிலையில் அரசு அறிவித்து இருப்பது தண்ணீர் பாய்ச்சுவதற்கு மட்டுமே போதுமானது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×