search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ் அப் தகவலால் பஸ்சில் தவறவிட்ட 1½ வயது குழந்தை 40 நிமிடத்தில் தாயிடம் ஒப்படைப்பு
    X

    வாட்ஸ் அப் தகவலால் பஸ்சில் தவறவிட்ட 1½ வயது குழந்தை 40 நிமிடத்தில் தாயிடம் ஒப்படைப்பு

    திருப்பூரில் வாட்ஸ் அப் தகவலால் பஸ்சில் தவறவிட்ட 1½ வயது குழந்தை 40 நிமிடத்தில் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து கொடுவாய்க்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டது. செட்டிபாளையம் அருகே சென்றபோது பஸ் இருக்கையில் 1½ வயது ஆண் குழந்தை தனியாக அழுதப்படி உட்கார்ந்திருந்தது.

    இதை கண்ட பஸ் பயணிகள் சிலர் கண்டக்டரிடம் தகவல் தெரிவித்தனர். குழந்தையின் பெற்றோர் யார்? என விசாரித்தனர். ஆனால் யாரும் குழந்தை குறித்து எதுவும் கூறவில்லை. இதனால் குழந்தையை செட்டிபாளையம் செக் போஸ்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைதொடர்ந்து போலீசார், அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி குழந்தை குறித்து விசாரித்தனர்.

    அப்போது சில வாகன ஓட்டிகள், குழந்தையை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் மூலமாக தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த வாட்ஸ் அப் தகவலை புதூர் பிரிவில் டிபார்மென்டல் ஸ்டோர் நடத்தி வரும் சசி என்பவர் பார்த்தார். குழந்தையை அப்பகுதியில் அடிக்கடி பார்த்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனால் அப்பகுதிக்கு சென்ற போலீசார் , குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரித்தனர்.

    இதில் அதே பகுதியை சேர்ந்த துர்காதேவி என்ற பெண்ணின் குழந்தை என தெரிய வந்தது.

    இதையடுத்து துர்காதேவியை கண்டு பிடித்து குழந்தையை போலீசார் ஒப்படைத்தனர்.

    இதுபற்றி தாய் துர்கா தேவி கூறும் போது, எனது கணவர் ரமேஷ் மனநிலை பாதித்தவர் ஆவார். நான் வேலைக்கு சென்றதால் குழந்தையை எனது தாயிடம் விட்டு சென்றேன். அப்போது கணவர் குழந்தையை எடுத்து கொண்டு பஸ்சில் சென்றுள்ளார். பின்னர் திடீரென செட்டி பாளையத்தில் இறங்கிய போது குழந்தையை மறந்து விட்டார். நாங்கள் குழந்தையை காணாமல் தவித்து கொண்டிருந்தோம்.

    நல்லவேளையாக வாட்ஸ் அப் போட்டோ மூலம் தகவல் சென்றதால் குழந்தையை மீட்ட போலீசார் என்னிடம் ஒப்படைத்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வாட்ஸ் அப் தகவலால் பஸ்சில் விட்டு சென்ற குழந்தை 40 நிமிடத்தில் தாயிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×