search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரிக்கு இம்மாத இறுதியில் கிருஷ்ணா நீர் மீண்டும் திறப்பு
    X

    பூண்டி ஏரிக்கு இம்மாத இறுதியில் கிருஷ்ணா நீர் மீண்டும் திறப்பு

    கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு இம்மாத இறுதியில் கிருஷ்ணா நீர் மீண்டும் திறக்கப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற தமிழக அரசு 1983-ல் ஆந்திர அரசுடன் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தத்தை செய்து கொண்டது.

    அதன்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 8 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 4 டி.எம்.சி. ஆக மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

    கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியதால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து கடந்த ஜனவரியில் தண்ணீர் திறந்து விடவில்லை.

    அதன்பின் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. இதனால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்ட ஒப்பந்தப்படி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட கோரி ஆந்திர அரசுக்கு தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர்.

    இதனை ஏற்று அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு குறைந்தது 2 டிஎம்சி தண்ணீரை பூண்டிக்கு திறந்துவிட உத்தரவிட்டார்.

    அதன்படி கடந்த மாதம் 21-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 1700 கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த 11-ந் தேதி வரை 1 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்ததாக பொதுப் பணித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

    இதனிடையே வங்கக்கடலில் ஏற்பட்ட வார்தா புயல் கரணமாக பலத்த மழை பெய்யத் தொடங்கியதால் கடந்த 11ந் தேதி இரவு கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    இதனால் கிருஷ்ணா நதி கால்வாய் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. கண்ட லேறு அணையில் 68 டிஎம்சி தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது 12.50 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

    அணையில் 8 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு வரை தண்ணீரை திறந்து விடலாம். இதனை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விட கோரி ஆந்திர அரசுக்கு தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கடந்த 4 நாட்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

    முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் உத்தரவு பெறப்பட்ட உடன் இம்மாத இறுதியில் கண்டலேறு அணையிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க உள்ளோம் என்று ஆந்திர அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாக தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

    பூண்டி ஏரி உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் நீர் மட்டம் 23. 58 அடியாக பதிவாகியது. 653 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. பூண்டியிலிருந்து சென்னை மெட்ரோ வாட்டர் போர்டுக்கு பேபி கால்வாய் மூலமாக வினாடிக்கு 30 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    Next Story
    ×