search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்கலையில் மக்கள் அமைதியாக வாழ வேண்டி போலீசார் காவடி ஊர்வலம்
    X

    தக்கலையில் மக்கள் அமைதியாக வாழ வேண்டி போலீசார் காவடி ஊர்வலம்

    மக்கள் அமைதியாக வாழ வேண்டி தக்கலை போலீஸ் நிலையத்தில் இன்று புஷ்ப காவடி எடுத்து போலீசார் ஊர்வலமாக சென்றனர்.
    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள குமாரகோவில் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை காவடி ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். தக்கலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து கோவிலுக்கு வருவார்கள்.

    அப்போது காவல் துறை சார்பிலும், பொதுப்பணித்துறை சார்பிலும் காவடி எடுத்து ஊர்வலமாக செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. குற்றங்கள் குறைந்து பொதுமக்கள் நிம்மதியாக வாழ வேண்டி காவல் துறை சார்பில் காவடி எடுக்கப்படுகிறது. இதேபோல நீர்வளம் பெருகி விவசாயம் செழிக்க வேண்டி பொதுப்பணித்துறை சார்பில் காவடி எடுக்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான காவடி ஊர்வலம் இன்று நடந்தது. இதையொட்டி தக்கலை போலீஸ் நிலையத்தில் புஷ்ப காவடி எடுத்து போலீசார் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சியில் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., மத்திய அரசு வக்கீல் வேலுதாஸ், அரசு வக்கீல் செல்வராஜன், பா.ஜ.க. பொதுச் செயலாளர் குமரி ரமேஷ், மாவட்ட செயலாளர் உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரசலையன், மேரி ஜெமிதா உள்பட பலர் பங்கேற்றனர்.

    போலீஸ் நிலையத்தில் புறப்பட்ட ஊர்வலம் தக்கலை பாரதிநகர், பஸ் நிலையம், மேட்டுக்கடை காவலர் குடியிருப்பு வழியாக குமாரகோவிலை சென்றடைந்தது.

    இதேபோல பொதுப்பணித்துறை சார்பில் தக்கலை பெருமாள் கோவிலில் இருந்து புஷ்ப காவடி ஊர்வலம் தொடங்கியது. என்ஜினீயர் மோகன்தாஸ் தலைமையில் இந்த காவடி ஊர்வலம் நடத்தப்பட்டது.

    மேலும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பறக்கும் காவடி, புஷ்பக்காவடி என பல்வேறு காவடிகள் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதனால் தக்கலை பகுதி முழுக்க இன்று பக்தி மயமாக இருந்தது.
    Next Story
    ×