search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அணுஉலை வடிவமைப்பில் கோளாறு இருப்பதை மத்தியஅரசு மூடி மறைக்கிற‌து: உதயகுமார்
    X

    அணுஉலை வடிவமைப்பில் கோளாறு இருப்பதை மத்தியஅரசு மூடி மறைக்கிற‌து: உதயகுமார்

    கூடங்குளம் அணுமின் நிலைய அணுஉலை வடிவமைப்பில் கோளாறு இருப்பதை மத்தியஅரசு மூடி மறைக்கிற‌து என்று உதயகுமார் பேசினார்.
    நெல்லை:

    அணு உலைக்கு எதிரான சமூக அமைப்புகள் சார்பில் கூடங்குளம் அணுமின் பூங்கா எதிர்ப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், பச்சைத்தமிழகம் கட்சி தலைவருமான உதயகுமார் கலந்துகொண்டு பேசியதாவது:-

    32 ஆண்டுகளுக்கு முன்பு போபால் நகரில் வி‌ஷவாயு கசிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. அந்த சம்பவத்துக்கு காரணமானவர் அமெரிக்காவுக்கு தப்பி சென்றுவிட்டார். பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை.

    கூடங்குளம் அணு உலைகள் வடிவமைப்பில் பிரச்சனை இருப்பது உண்மை. கோளாறு உள்ளது. இது வெளியே தெரிந்தால் இந்தியா முழுவதும் அணு உலைகள் அமைக்க முடியாது என்பதால் மத்திய அரசு மூடி மறைக்கிறது.

    கூடங்குளம் அணு உலையில், 13 ஆயிரத்து 500 கோடி யூனிட் மின் உற்பத்தி மூலம் ரூ.1,000 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக கூறுகிறார்கள். அணுமின் நிலையத்துக்கு டீசல் மட்டும் ரூ.35 கோடிக்கு வாங்கி உள்ளார்கள். கட்டுமானத்துக்கு மொத்தம் ரூ.22 ஆயிரம் கோடி செலவு என்று கூறுகிறார்கள். இவ்வளவு செலவு செய்துவிட்டு ரூ.1000 கோடி வருமானம் என்று கூறுகிறார்கள். குஜராத்தில் அமெரிக்கா அணு உலையை நிறுவுவதற்கு முயற்சி செய்த போது அதை பிரதமர் மோடி ரத்து செய்து ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பி விட்டார். கூடங்குளத்தில் 3, 4, 5 மற்றும் 6-வது அணு உலைகளை அமைக்க ஒரே நாளில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் 99.9 சதவீதம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இருந்தாலும் கூட்டத்தில் நல்ல தகவல்கள் கிடைத்தது என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். தமிழகத்தில் உள்ள அ.தி. மு.க., தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் கூடங்குளம் அணு உலை பூங்காவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு உதயகுமார் பேசினார்.
    Next Story
    ×