search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் சீருடையில் வினோத்
    X
    போலீஸ் சீருடையில் வினோத்

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்து 6 மாதமாக வழிப்பறி செய்த மோசடி கும்பல்

    கோவையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்து 6 மாதமாக வழிப்பறி செய்த மோசடி கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேட்டுப்பாளையம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் மொச்சிகுளத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரகண்ணன் (வயது 30).

    திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் அணைக்கட்டு பகுதியில் வசிக்கும் தனது அக்காள் வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    இவருக்கு பேஸ்புக் மூலம் கோவை கணபதியை சேர்ந்த தருண்கார்த்திக்(19) என்பவர் நண்பரானார். அவர் செல்போனில் இரட்டை அர்த்த வசனங்களை எஸ்.எம்.எஸ். அனுப்பி மாரீஸ்வர கண்ணனிடம் நெருங்கி பழகினார்.

    கடந்த 1-ந் தேதி தருண்கார்த்திக், மாரீஸ்வரகண்ணனை தொடர்பு கொண்டு மேட்டுப்பாளையத்தில் தனது நண்பர்கள் அறையில் யாரும் இல்லை. அங்கு நாம் சந்திக்கலாம் என அழைத்தார். அதன் படி மாரீஸ்வரகண்ணன் வந்ததும் அவரை தாசம்பாளையத்தில் ஒதுக்குபுறமாக உள்ள வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு ஒரு கும்பல் இருந்தனர்.

    அதில் போலீஸ் சீருடையில் இருந்த வினோத்(28) என்பவர் தன்னை மேட்டுப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறியதோடு, மாரீஸ்வரகண்ணனிடம் நீ இங்கு தகாத உறவுக்கு தானே வந்திருக்கிறாய்? எனக்கூறி மிரட்டி பிரம்பால் அடித்தார். பின்னர் மாரீஸ்வரகண்ணன் வைத்திருந்த ரூ.5 ஆயிரம், செல்போன், ஏ.டி.எம்.கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை பறித்தார்.

    மேலும், உனக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன், அதை இரண்டு நாட்களுக்குள் மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கட்ட வேண்டும் என மிரட்டி அனுப்பினார்.

    அப்போது மாரீஸ்வரகண்ணனுக்கு இந்த கும்பல் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் தாசம்பாளையத்திற்கு விரைந்து சென்று மாரீஸ்வரகண்ணனை மிரட்டி பணம் பறித்த 6 பேர் கும்பலை மடக்கிப் பிடித்தனர்.



    விசாரணையில் அவர்கள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வினோத்(28), கோத்தகிரி தட்டப்பள்ளத்தை சேர்ந்த மனோஜ்(20), மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சரவணன்(21), அருண்குமார்(24), கோவை சித்தாபுதூரை சேர்ந்த கோபிநாத்(19), கோவை கணபதியை சேர்ந்த தருண்கார்த்திக்(19) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதில் மனோஜ், சரவணன், கோபிநாத் ஆகியோர் கல்லூரி மாணவர்கள் ஆவர். தருண்கார்த்திக் டிப்ளமோ பட்டதாரி ஆவார். அருண் குமார் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இவர்கள் மேட்டுப்பாளையத்தில் அறை எடுத்து தங்கிய போது நண்பர்களாக பழகி உள்ளனர்.

    இவர்கள் ஆடம்பரமாக செலவு செய்ய பணம் தேவைப்பட்டதால், பேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர்களை ஓரினச் சேர்க்கைக்கு வரவழைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

    குறிப்பாக பேஸ்புக்கில் பழகும் நண்பர்களிடம் வாலிப வயதுடையவர்களை பார்த்து அவர்களிடம் ஆபாசமாக பேசி நெருங்கி பழகுவதில் தருண் கார்த்திக் கில்லாடியாக இருந்துள்ளார். நேரில் வருபவர்களை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து வருவது அருண்குமாரின் வேலை. அவ்வாறு வந்தவரிடம் வினோத் போலீஸ் போல நடித்து பணம் பறித்துள்ளார்.

    கடந்த 6 மாதத்தில் இந்த கும்பல் பல வாலிபர்களிடம் லட்சக்கணக்கில் கைவரிசை காட்டி உள்ளனர். எனினும் போலீசில் யாரும் புகார் கொடுக்காததால் இந்த கும்பல் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். கிடைத்த பணத்தில் உயர்ரக நாய்களை வாங்கி வளர்த்து விற்றும் சம்பாதித்துள்ளனர்.

    இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், 8 செல்போன்கள், இருசக்கர வாகனம், போலீஸ் சீருடை, அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

    இவர்கள் மீது கூட்டுச்சதி, மோசடி, அரசு அதிகாரி என கூறி மிரட்டுதல், வழிப்பறி உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×