search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உடல் தகனம்
    X

    முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உடல் தகனம்

    உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
    திருவிடைமருதூர்:

    முன்னாள் அமைச்சரும், தி.மு.க. முன்னோடிகளில் ஒருவரான கோ.சி.மணி உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறையில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று மதியம் 12 மணி அளவில் கோ.சி.மணி உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கோ.சி.மணியின் உடலுக்கு முன்னாள் மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ராசா, ஏம்.எல்.ஏக்கள் நேரு, பொன்முடி, தமிழ்மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதே போல் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனும் கோ.சி.மணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வின் முன்னோடிகளில் ஒருவராக விளங்கியவர் கோ.சி.மணி. அவரின் மறைவு தி.மு.க.விற்கு ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பாக அமைந்துள்ளது. கருணாநிதியின் உள்ளத்தில் நம்பிக்கைக்குரிய இடத்தை பெற்றவர். மேலவை உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், விவசாயத்துறை, கூட்டுறவுத்துறை, உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் என பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார்.

    அந்த பொறுப்புகளுக்கு எல்லாம் பெருமையையும், மரியாதையையும் அங்கீகாரத்தையும் தேடித்தந்தவர் கோ.சி.மணி. தமிழகத்தில் கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் எல்லா பகுதிகளிலும் குடிநீர் வசதி ஏற்பட்டு இருக்கிறது என்றால் அதற்கு மூலகாரணம் கோ.சி.மணி தான். அவர் பணி இன்றைக்கு மட்டும் அல்ல, என்றைக்கும் பாராட்டும் அளவுக்கு இருக்கும்.

    உடல்நிலை நலிவடைந்த நிலையிலும் தி.மு.க. நிகழ்ச்சிகளில், கலந்து கொண்டு தனது உணர்வை, தலைவர் பால் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தியவர் கோ.சி.மணி. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பிலும், எனது சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் மதியம் 2.45 மணிக்கு ஆடுதுறையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து கோ.சி.மணியின் உடல் அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள மேக்கிரிமங்கலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிசடங்குகள் நடைபெற்றன. பின்னர் அங்கிருந்து கோ.சி.மணியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மேக்கிரிமங்கலத்தில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்திலும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

    கோ.சி.மணி மறைவையொட்டி ஆடுதுறை, திருவிடைமருதூர், திருபுவனம், கும்பகோணம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    Next Story
    ×