search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டில் புதுவை வக்கீல்களுக்கு நீதிபதி பதவி: நாராயணசாமி உறுதி
    X

    சென்னை ஐகோர்ட்டில் புதுவை வக்கீல்களுக்கு நீதிபதி பதவி: நாராயணசாமி உறுதி

    புதுவை வக்கீல்களுக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி பதவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசு மற்றும் வக்கீல்கள் சங்கம் சார்பில் சட்ட நாள் விழா சன்வே ஓட்டலில் நடந்தது.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தேவதாஸ் தலைமை தாங்கினார். ஐகோர்ட்டு நீதிபதி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். முதல்-அமைச்சர் நாராயணசாமி 25 ஆண்டுகள் பணி முடிந்த வக்கீல்களை கவுரவித்து சான்றிதழ் வழங்கினார்.

    தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வக்கீல்களுக்கு நாராயணசாமி பரிசு வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    சட்டம் படித்தவர்களுக்கு பல்வேறு இடங்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் வெளியிடங்களுக்கு சென்று பணியாற்ற முன்வர வேண்டும். சிறப்பாக பணியாற்றினால் உயர்ந்த நிலையை அடையலாம். இளம் வக்கீல்களை மூத்த வக்கீல்கள் ஊக்கப்படுத்த வேண்டும்.

    அப்போது தான் அவர்களால் பல சாதனைகளை செய்ய முடியும். இளம் வக்கீல்களுக்கு மாத உதவி தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். வக்கீல்கள் சேமநல நிதியாக ரூ.20 லட்சம் வழங்கப்படும். அதனை இந்த ஆண்டே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுவையில் காலியாக உள்ள 5 நீதிபதி பதவி இடங்களுக்கும் விரைவில் நிரப்பப்படும் கோர்ட்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். புதுவையில் தனியாக சி.பி.ஐ. கோர்ட்டு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை வக்கீல்களுக்கு சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி பதவிகள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    விழாவில் புதுவை தலைமை நீதிபதி ராமதிலகம், சட்டதுறை செயலாளர் செந்தில்குமார், மற்றும் புதுவை நீதிபதிகள், வக்கீல் சங்க தலைவர் திருகண்ண செல்வம் மற்றும் நிர்வாகிகள், வக்கீல்கள் பங்கேற்றனர்.
    Next Story
    ×