search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘நடா’ புயலால் பலன் இல்லை: புதுவையை ஏமாற்றிய மழை
    X

    ‘நடா’ புயலால் பலன் இல்லை: புதுவையை ஏமாற்றிய மழை

    நடா புயலால் புதுவையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் நடா புயல் புதுவையை ஏமாற்றியது. இதனால் விவசாயிகளும், புதுவை மக்களும் கடும் கவலைக்குள்ளாகி உள்ளனர்.
    புதுச்சேரி:

    ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் புதுவைக்கு சராசரியாக 915.6 மி.மீ. மழை கிடைக்கும். புதுவையை பொறுத்த வரை பெரும்பாலான விவசாயம் நிலத்தடி நீரை நம்பியே நடக்கிறது.

    இதனால் வடகிழக்கு பருவ மழை காலத்தில் மழையால் நிலத்தடி நீர் மட்டம் வழக்கமாக உயரும். இதனை நம்பியே புதுவை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். அதோடு நிலத்தடி நீரை நம்பியே குடிநீரும் உள்ளது.

    இத்தகைய சூழலில் கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக தொடர் கனமழை பெய்தது. இதனால் வழக்கமான ஆண்டு சராசரியை விட 556 மி.மீ. மழை கூடுதலாக பதிவானது.

    அதாவது 1471 மி.மீ. மழை புதுவையில் பதிவானது. இது, சராசரியை விட 60 சதவீதம் கூடுதலாகும். கனமழையால் விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் நீருக்குள் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மழை இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக புதுவை அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தது.

    கால்வாய்கள், கழிவுநீர் வாய்க்கால்கள், ஏரி, குளங்களுக்கு செல்லும் நீர் வழி தடங்கள் தூர் வாரப்பட்டு தயார் நிலையில் இருந்தது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் நீர் தேங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மழையை எதிர்பார்த்து இருந்த நிலையில் செப்டம்பர், அக்டோபர் மாதம முழுவதும் மழை பெய்யவில்லை. கோடை வெயிலை போன்று கடுமையான வெயில் அடித்தது. நவம்பர் மாதத்திலும் மழை பெய்யவில்லை.

    ஆனால், நவம்பர் மாதத்தின் இறுதியில் குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது. அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனி சூழ்ந்தது.

    இதனால் இனி மழை இருக்குமா? என்ற கேள்விக்குறி எழுந்தது. ஆண்டு சராசரி மழை அளவில் 16 சதவீதம் மழை மட்டுமே இதுவரை பெய்துள்ளது.

    இந்த நிலையில் வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை திடீரென புயல் சின்னமாக உருவெடுத்தது.

    நடா புயலால் புதுவையில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், நேற்று காலை 6 மணி முதல் லேசான மழை பெய்தது.

    காலை 8 மணியளவில் மழை சற்று வலுத்தது. அதன் பிறகு பகல் நேரம் முழுவதும் மழை பெய்யவில்லை. இரவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், இரவிலும் பெரிய அளவில் மழை பெய்யவில்லை. மாலை 6 மணியளவில் லேசான மழை பெய்தது. அதன் பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வரை மழை பெய்யவில்லை.

    ‘நடா’ புயல் கரையை கடந்த அதிகாலை 4 மணியளவில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்து இருந்தது. ஆனால், புதுவையில் மழை பெய்யவில்லை.

    வானம் மப்பும் மந்தாரமுமாக உள்ளது. லேசான குளிர்ந்த காற்று வீசி வருகிறது. ‘நடா’ புயலும் புதுவையை ஏமாற்றியது. இதனால் விவசாயிகளும், புதுவை மக்களும் கடும் கவலைக்குள்ளாகி உள்ளனர்.
    Next Story
    ×