search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோரி வேலை நிறுத்த போராட்டம்- ரெயில் மறியல்
    X

    தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோரி வேலை நிறுத்த போராட்டம்- ரெயில் மறியல்

    தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோரி வேலை நிறுத்தம் மற்றும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக மீனவர் சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    ராமேசுவரம்:

    தமிழக கடலோர மீனவர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் ராமேசுவரம் தங்கச்சி மடத்தில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளை சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ரூபாய் நோட்டு பிரச்சனையை தீர்க்க கடலோர கிராமங்களில் மீனவர்களுக்கு தனியாக ஏ.டி.எம்.வசதி அல்லது நடமாடும் வங்கி அமைக்க வேண்டும்.

    இலங்கை சிறையில் உள்ள 20 மீனவர்கள், 118 படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்து கடலில் மூழ்கி சேதமான 18 படகுகளின் உரிமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

    எல்லை தாண்டும் மீனவர்களின் படகுகளை சிறைப்பிடிப்பதுடன், அவர்களுக்கு ரூ.17 கோடி வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கண்டனத்துக்குரியது.

    கச்சத்தீவில் வருகிற 7-ந்தேதி நடைபெறும் புனித அந்தோணியார் தேவாலய திறப்பு விழாவுக்கு தமிழக மீனவர்களையும், பத்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதமானால் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையும், ரெயில் மறியல் போராட்டத்தையும் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

    கூட்டத்திற்கு போஸ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜேசுராஜ், தாஜீ தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாம்பன் சிப்பி ஜேசு, ஜெகதாப்பட்டினம் கலைமணி, மல்லிப்பட்டினம் வடுகநாதன், கோட்டைப்பட்டினம் ஹசன் முகைதீன், மண்டபம் கணபதி, தங்கச்சி மடம் சவேரியார் பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×