search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்:  கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை-தர்ணா
    X

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்: கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை-தர்ணா

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளங்குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் நீர்முள்ளிக்குட்டையை அடுத்த ராஜாபட்டினத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 28). லாரி டிரைவர். இவரது மனைவி இந்து (23). இந்த தம்பதிக்கு சுபாஷினி என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான இந்துவுக்கு கடந்த 24-ந்தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவ வார்டில் இருந்த அந்த குழந்தை நேற்று முன்தினம் திடீரென மாயமானது.

    குழந்தையின் தந்தை வெங்கடேஷ் அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் கொடுத்தார்.

    போலீசார் விசாரணை நடத்திய போது 35 வயது மதிக்கத்தக்க மர்ம பெண் ஒருவர் ஆஸ்பத்திரியின் பிரசவ வார்டுக்குள் புகுந்து குழந்தையை கடத்தி சென்றது அங்குள்ள காமிராக்களில் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.

    அந்த மர்ம பெண்ணை பிடிக்க டவுன் போலீஸ் உதவி கமி‌ஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் வின்சென்ட் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    அந்த தனிப்படையினர் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அந்த பெண்ணின் படத்தை அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    மேலும் நடத்திய விசாரணையில், குழந்தையை கடத்திய பெண் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில் வந்து கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்து சென்றது, அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றது வரை காமிராவில் பதிவாகி உள்ளது தெரிய வந்தது.

    அப்போது அந்த பெண் எந்தவித பதட்டமும் இல்லாமல் தனது குழந்தையை கொண்டு செல்வது போலவே உள்ளார். இதனால் குழந்தை இல்லாத ஏக்கத்தில் அதனை வளர்க்கும் நோக்கத்தில் அந்த குழந்தையை கடத்தி சென்றாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் குழந்தையை கடத்திய பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு பெண்ணிடம் வெகு நேரம் பேசியுள்ளார். அந்த பெண்ணிடம் போலீசார் விசாரித்த போது, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், சிகிச்சைக்காக வந்ததாகவும் நாடகமாடியது தெரிய வந்துள்ளது. அதை வைத்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஆஸ்பத்திரி ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், காவலாளிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் போலீசாருக்கு சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

    இதனால் இன்று இரவுக்குள் குழந்தையை கடத்திய மர்ம பெண் சிக்குவார் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

    மேலும் குழந்தையை கடத்திய பெண் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 944217454 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே குழந்தை குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் குழந்தையின் தாய் இந்து கதறி அழுத படியே உள்ளார். அவரை உறவினர்கள் தேற்றி வருகிறார்கள்.

    ஆஸ்பத்திரி சார்பில் டீன் கனகராஜ் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த தனி குழு அமைத்துள்ளார். அந்த குழுவினரும் சம்பவம் நடந்த போது ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள், காவலாளிகளிடமும் இன்றும் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் அந்த அறிக்கை டீனிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை குழந்தையின் தந்தை வெங்கடேஷ் மற்றும் அவரது உறவினர்களும், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் காஜா மொய்தீன் மற்றும் தொண்டர்கள் திடீரென சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.

    பின்னர் இவர்கள் டீன் அறையை முற்றுகையிட்டனர். குழந்தை கடத்தப்பட்டதால் இதற்கு சரியாக கண்காணிக்காத அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர்கள், நர்ஸ்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என்பது போன்ற கோ‌ஷங்களை முழங்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதை அறிந்த சேலம் செவ்வாய்பேட்டை போலீசார் சம்பவ இடம் வந்து , குழந்தை கடத்தல் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். விரைவில் குழந்தையை மீட்டு விடுவோம். அதுவரை பொறுத்து இருங்கள் என்று தெரிவித்து சமாதானம் செய்தனர்.

    ஆனால் அவர்கள் சமாதானம் அடையாமல் கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டர் கார் நிறுத்தும் பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைஅறிந்த சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து உறவினர்களை சமாதானம் செய்தனர்.

    பின்னர் குழந்தையின் தந்தை வெங்கடேஷ் அதிகாரிகளிடம் மனு கொடுத்தார்.

    இந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    எனது மனைவிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. எனது தாயார் குழந்தை அருகில் இருந்து கவனித்து வந்தார். அவர் உணவு வாங்க வெளியில் சென்று இருந்தார். அப்போது என் குழந்தையை கடத்தி சென்று விட்டனர். இதுகுறித்து தகுந்த புகார் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. சேலம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவமனையின் டீன் கவனக்குறைவாக இருந்தார். இதனால் அவர் மீதும், மருத்துவமனை காவல் பணியில் ஈடுபட்ட காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறோம்.

    குழந்தை மாயமாகி 3 நாட்கள் ஆகிறது. குழந்தை தாய் பால் குடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் குழந்தையை விரைந்து கண்டுபிடித்து தர உரிய நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
    Next Story
    ×