search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 பெண்கள் கைது
    X

    நெல்லை மாவட்டத்தில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 பெண்கள் கைது

    நெல்லை மாவட்டத்தில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 147 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தென்காசி:

    நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அச்சன்புதூரை சேர்ந்தவர் முத்து செல்வகுமரன். இவரது மனைவி தங்கம் (வயது 31). இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் தென்காசியில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு சம்பவத்தன்று தீபாவளி ஜவுளி எடுக்க சென்றார். ஒரு கடையில் ஜவுளி எடுத்துக் கொண்டு இருந்தார். அந்த கடையில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்வகுமரனின் குழந்தையின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை ஒரு பெண் கண் இமைக்கும் நேரத்தில் பறித்தார். பின்னர் அந்த தங்க சங்கிலியை மற்றொரு பெண்ணிடம் மின்னல் வேகத்தில் கொடுத்தார். இதனை கண்ட குழந்தையின் தாய் தங்கம் உடனே சத்தம் போட்டார். அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அந்த 2 பெண்களையும் பிடித்து தென்காசி போலீசில் ஒப்படைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இரு பெண்களையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் ஜவுளிக்கடையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடிய இருவரும் மாமியார்-மருமகள் என்பது தெரியவந்தது.

    அவர்கள் நெல்லை சந்திப்பு பாலபாக்கியா நகர் 5-வது தெருவை சேர்ந்த பரமசிவம் பிள்ளை மனைவி ராமலட்சுமி (55) என்பதும், இன்னொருவர் அவருடைய மருமகள் பிரியா (24) என்பதும் தெரியவந்தது.

    அவர்களிடம் தொடர்ந்து இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், அந்தோணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் காளிஸ்வரி, சகாய செல்வன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    ராமலட்சுமி, பிரியா மற்றும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த கல்யாணி என்ற கலா (45), தூத்துக்குடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கோகிலா என்ற விஜயா (57) ஆகிய 4 பேரும் கூட்டாக சேர்ந்து கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்க நகைகளை திருடியது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் நெல்லை மாவட்டம் முழுவதும் தங்களது கைவரிசையை காட்டி உள்ளனர். தென்காசி, சுரண்டை, ஆலங்குளம், கடையம், ஆழ்வார்குறிச்சி, பாளையங்கோட்டை, வாசுதேவநல்லூர் உள்பட 22-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கும்பலாக சென்று ஒருவர் திருடிய நகையை மற்றொருவரிடம் கொடுத்து இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து காயல்பட்டினத்தை சேர்ந்த கல்யாணி என்ற கலா, தூத்துக்குடியை சேர்ந்த கோகிலா என்ற விஜயா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 147 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. கைதான 4 பெண்களும் தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவர்கள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 4 பேரிடமும் தனித் தனியாக போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அப்போது தான் இவர்களுடன் தொடர்புடைய மற்ற நபர்கள் யார்? இவர்கள் வேறு எந்த பகுதியில் எல்லாம் கைவரிசை காட்டி உள்ளனர் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×