search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் போலீஸ் நிலையம் அருகே வாலிபர் படுகொலை
    X

    மதுரையில் போலீஸ் நிலையம் அருகே வாலிபர் படுகொலை

    கொலை வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தவர், போலீஸ் நிலையம் அருகே இன்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    மதுரை:

    மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்தவர் ராக்கப்பன். இவரது மகன் நாகேந்திரன் (வயது23), கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு கொலை வழக்கில், கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில், இவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. கோர்ட்டு உத்தரவுப்படி, தினமும் நாகமலை புதுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் நாகேந்திரன் கையெழுத்திட்டு வந்தார்.

    இன்று (செவ்வாய்க் கிழமை)காலையும் அவர், போலீஸ் நிலையம் வந்து கையெழுத்திட்டார். அதன் பிறகு டீக்கடைக்கு சென்ற நாகேந்திரன், அங்கு டீ அருந்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக வந்தது.

    அதில் இருந்து இறங்கியவர்கள், நாகேந்திரனை சுற்றி வளைத்தனர். அவர்களை கண்டதும், அதிர்ச்சி அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அதற்குள் அந்த கும்பல் , அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இருப்பினும் உயிர் பிழைக்க வேண்டி ரத்தம் சொட்ட... சொட்ட... நாகேந்திரன் தப்பி ஓடினார்.

    அந்த பகுதியில் உள்ள ஒரு சந்துக்குள் சென்ற அவர், அதற்குமேல் செல்ல வழியில்லாமல் நிற்க, துரத்தி வந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அதன் பிறகு கொலைக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் நாகமலை புதுக்கோட்டை போலீசார் விரைந்து வந்து நாகேந்திரன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை குறித்த தகவல் கிடைத்ததும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திர பிதாரி, சமய நல்லூர் துணை கண்காணிப்பாளர் வனிதா ஆகியோரும் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட நாகேந்திரன் மீது எஸ்.எஸ்.காலனி, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையில் கொலையாளிகள் தப்பிச்சென்ற கார், விளாச்சேரி பகுதியில் சிக்கி உள்ளது. அதில் இருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×