search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிடும் நெல்லித்தோப்பு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்
    X

    முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிடும் நெல்லித்தோப்பு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்

    முதல்-அமைச்சர் நாராயணசாமி போட்டியிடும் நெல்லித்தோப்பு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
    புதுச்சேரி:

    தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளோடு புதுவை நெல்லித்தோப்பு தொகுதிக்கும் இடைத்தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.

    காங்கிரஸ் சார்பில் முதல்- அமைச்சர் நாராயணசாமி போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    வேட்பு மனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைகிறது.

    தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள தொழில் மற்றும் வணிக வரித்துறை அலுவலகத்தில் நாளை காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரி மலர்கண்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

    நவம்பர் 3-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய 5-ந் தேதி இறுதி நாளாகும். அன்றைய தினம் மாலையே வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 19-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறும்.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி கடந்த 21-ந் தேதி தொடங்கி வீதி, வீதியாக, வீடு-வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

    அ.தி.மு.க. வேட்பாளர் ஓம்சக்தி சேகரும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளார். பிரதான எதிர்கட்சியான என். ஆர். காங்கிரஸ் இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.

    அ.தி.மு.க. ஆதரவு கேட்கும் பட்சத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பது என்றும் அ.தி.மு.க. ஆதரவு கேட்கவில்லை எனில் இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்றும் என்.ஆர். காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆனால், இதுவரை அ.தி.மு.க. ஆதரவு கேட்கவில்லை. இன்னும் ஓரிரு நாட்களுக்கு பிறகு மீண்டும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும். இதனால் காங்கிரஸ்-அ.தி.மு.க. இடையே நேரடி போட்டியே ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    நெல்லித்தோப்பு தொகுதியில் 26 வாக்குச்சாவடிகள் உள்ளது. மொத்த வாக்காளர்கள் 31 ஆயிரத்து 366 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 14 ஆயிரத்து 939 பேரும், பெண் வாக்களர்கள் 16 ஆயிரத்து 418 பேரும் உள்ளனர்.

    Next Story
    ×