search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி ரூ. 1.80 லட்சம் பறிப்பு: 4 பேர் கொண்ட கும்பல் கைவரிசை
    X

    டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி ரூ. 1.80 லட்சம் பறிப்பு: 4 பேர் கொண்ட கும்பல் கைவரிசை

    அரிவாளை காட்டி மிரட்டி டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கொம்பையா (வயது 35). இவர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக உள்ளார். அதே கடையில் விற்பனையாளராக வல்லநாடு அருகே உள்ள சீத்தார்குளத்தை சேர்ந்த கந்தசாமி (47) என்பவர் வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10.15 மணி அளவில் டாஸ்மாக் கடையில் விற்பனை முடிந்ததும் இருவரும் வசூல் பணம் ரூ. 1.80 லட்சத்துடன் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். டாஸ்மாக் கடையில் இருந்து சிறிது தூரம் சென்றதும் எதிரே 2 பைக்கில் வந்த 4 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல் கொம்பையா, கந்தசாமி ஆகிய இருவரையும் வழி மறித்து அரிவாளை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டது.

    இச்சம்பவம் குறித்து கொம்பையா முறப்பநாடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சமீபகாலமாக வல்லநாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் செல்வோரை மறித்து நகை-பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. எனவே வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×