search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. ஊர்வலத்தில் மூதாட்டி பலி: திருவண்ணாமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு
    X

    அ.தி.மு.க. ஊர்வலத்தில் மூதாட்டி பலி: திருவண்ணாமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

    அ.தி.மு.க. ஊர்வலத்தில் மூதாட்டி பலியான சம்பவத்தையடுத்து முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிய திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவிட்டுள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் அ.தி.மு.க. பால்குட ஊர்வலத்தில் மூதாட்டி பலியானது தொடர்பாக டவுன் இன்ஸ்பெக்டர் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, தமிழகம் முழுவதும் கோவில்களில் அ.தி.மு.க.வினர் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், திருவண்ணாமலையில் 5 ஆயிரத்து 8 பால்குட ஊர்வலம் நேற்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்காக, பச்சையம்மன் கோவில் முன்பு இருந்து பால் குடத்தை தலையில் சுமந்து கொண்டு, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலம் செல்ல 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்தனர். இதையடுத்து, பால் குடங்களை வாங்குவதற்காக கோவிலுக்குள் பெண்கள் கும்பலாக நுழைந்தனர்.

    அப்போது, படிக்கட்டுகள் ஈரமாக இருந்ததால் கால் வழுக்கி பல பெண்கள் தடுமாறி விழுந்தனர். அதே நேரத்தில், பின்னால் வந்தவர்கள் பால் குடங்களை வாங்க முண்டியடித்ததால், கீழே விழுந்த பெண்கள் எழ முடியாமல் திணறினர். இதில் பலர் கும்பலில் சிக்கி மிதிப்பட்டு மயக்கம் அடைந்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கூட்டம் அதிகரித்தபடியே இருந்ததால், மயங்கிய 17 பெண்களை உடனடியாக மீட்டு வெளியில் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர், ஒரு வழியாக அவர்களை மீட்டு ‘108’ ஆம்புலன்சில் ஏற்றி திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில், திருவண்ணாமலை வ.உ.சி. நகரை சேர்ந்த கமலாம்மாள் (வயது 60) என்பவர் உடலை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மீதமுள்ள 16 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து, பால்குட ஊர்வலத்திற்கு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிய புகாரில், திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷை அதிரடியாக சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவிட்டுள்ளார்.
    Next Story
    ×