search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்டியுடன் தாய் யானை
    X
    குட்டியுடன் தாய் யானை

    மயங்கி கிடந்த பெண் யானைக்கு ஆண் குட்டி யானை பிறந்தது: கர்ப்பமாக இருந்தது கூட தெரியாமல் சிகிச்சை அளித்த டாக்டர்கள்

    கோவை அருகே மயங்கி கிடந்த பெண் யானைக்கு இன்று அதிகாலை ஆண் குட்டி யானை பிறந்தது. தாயும்-சேயும் நலமுடன் உள்ளனர்.
    பேரூர்:

    கோவை அருகே உள்ள பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் மலையடிவாரத்தில் கடந்த 19-ந்தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் யானை மயங்கி கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். யானையை பரிசோதித்த டாக்டர்கள் பிளாஸ்டிக், கற்றாழை சாப்பிட்டதால் ஜீரணம் ஆகாமல் மயங்கியதாக தெரிவித்தனர். பின்னர் யானைக்கு வாழைப்பழம், வெல்லம், கரும்பு, இஞ்சி, உப்பு, அதிகளவில் தண்ணீர் கொடுக்கப்பட்டது.

    2 நாள் சிகிச்சைக்கு பின்பு 20-ந்தேதி இரவு 9 மணியளவில் பெண் யானை எழுந்து நின்றது. பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த தண்ணீரை குடித்த யானை மெதுவாக வனப்பகுதியை நோக்கி நடந்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டனர்.

    மறுநாள் 21-ந்தேதி காலை அந்த யானை வனப்பகுதியில் மற்றொரு இடத்தில் மயங்கி கிடந்தது. இதையடுத்து மீண்டும் கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து பெண் யானையால் எழுந்திருக்க முடியவில்லை. மேலும் அவ்வப்போது இந்த பெண் யானையை தேடி காட்டு யானைகள் கூட்டமாக வந்ததால் அங்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலை உருவானது.

    இதையடுத்து யானை பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டு லாரி மூலம் சாடிவயல் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கடந்த 2 நாட்களாக யானைக்கு பச்சை இலைகள் உணவாக கொடுக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த யானை திடீரென பிரசவ வலியால் அவதிப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் ஆண் குட்டி யானையை ஈன்றது. தற்போது தாயும்-சேயும் நலமுடன் உள்ளனர். யானை பிரசவத்தின்போது கால்நடை டாக்டர் மனோகரன், இக்கரை போளுவாம்பட்டி வன ரேஞ்சர் தினேஷ்குமார் மற்றும் வனவர்கள் சிவக்குமார், மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    மயக்கம் அடைந்த பெண் யானை பிரசவ வலியால் மயங்கி கிடந்தது தெரியாமல் ஜீரண கோளாறால் மயங்கி கிடந்ததாக கூறி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த யானையை பொக்லைன் மூலம் தூக்கி நிறுத்தி லாரியில் கொண்டு வந்துள்ளனர். யானை கர்ப்பமாக இருந்தது கூட தெரியாமல் டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளது வன ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×