search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சை முடிந்து தண்ணீர் குடித்த பெண் யானை.
    X
    சிகிச்சை முடிந்து தண்ணீர் குடித்த பெண் யானை.

    கோவை அருகே 2 நாட்களாக சிகிச்சைப் பெற்று வனத்துக்கு திரும்பிய பெண் யானை மீண்டும் மயக்கம்

    கோவை அருகே 2 நாட்களாக சிகிச்சைப் பெற்று வனத்துக்கு திரும்பிய பெண் யானை மீண்டும் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் அடுத்த பெரிய தடாகம் அனுவாவி சுப்பிரமணியர் கோவில் மலையடிவாரத்தில் நேற்று முன்தினம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை மயங்கி கிடந்தது. இது பற்றி தெரியவந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ஜீரண கோளாறால் அவதிப்பட்டு வந்த யானை நடக்க முடியாமல் தவித்தது தெரியவந்தது.

    இதையடுத்து வனத்துறை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு கடந்த 2 நாட்களாக யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகள் சாப்பிட்டதால் அவற்றை ஜீரணிக்க முடியாமல் யானை அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து யானைக்கு வெல்லம், வாழைப்பழம், கரும்பு, இஞ்சி, தண்ணீர் வழங்கப்பட்டது.

    நேற்று 18 பாட்டில் குளுகோஸ் ஏற்றப்பட்டது. மேலும், வெயில் அதிகமாக இருந்ததால் சாமியானா பந்தல் போட்டு சிகிச்சை அளித்தனர்.

    இதன் பயனாக யானையின் உடல் நலம் தேறி வந்தது. எனவே அந்த யானையை மீண்டும் வனத்துக்குள் அனுப்பும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கினர். இரவு நேரம் ஆகிவிட்டதால் காட்டு யானைகள் வந்துவிடும் என்பதால் பாதுகாப்புகாக சாடிவயலில் இருந்து கும்கி பாரி மீண்டும் கொண்டு வந்து வனப்பகுதியில் ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    இரவு 9 மணியளவில் யானையின் வயிற்றில் நல்லெண்ணை தடவி விடப்பட்டது. இதன் பின்னர் யானை உடல் நலம் படிப்படியாக தேறியது. அப்போது பொக்லைன் மற்றும் பொது மக்கள் உதவியுடன் யானை கயிறு கட்டி இழுத்து நிறுத்தப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை யானை குடித்தது. பின்னர் மெதுவாக வனப்பகுதியை நோக்கி பிளிறியபடி பெண் யானை நடக்க ஆரம்பித்தது.

    இந்த சத்தத்தை கேட்ட அதன் குட்டி யானை மற்றும் பெரிய யானைகள் அதை நோக்கி வந்தது. பின்னர் யானை கூட்டத்துடன் அந்த பெண் யானை சேர்ந்தது.

    அப்போது பெண் யானை தனது குட்டி யானையின் துதிக்கையை பிடித்து கொஞ்சியது. தாய் யானை வந்ததால் குட்டி யானை மகிழ்ச்சியடைந்தது.

    பெண் யானை மற்ற யானைகளுடன் சென்றதால் வனத்துறையினர் நிம்மதி அடைந்து திரும்பினர்.

    இந்த நிலையில் இன்று காலை வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது, ஜீரண கோளாறால் அவதிப்பட்ட பெண் யானை மீண்டும் மயங்கி கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கால்நடை டாக்டர்கள் மூலம் மீண்டும் யானைக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×