search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல்நிலை தேறுகிறது: ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் சிகிச்சை
    X

    உடல்நிலை தேறுகிறது: ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் சிகிச்சை

    உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் சிகிச்சை அளித்துவருகிறார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடந்த வாரம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சலால் அவதிப்பட்ட அவருக்கு நீர்ச்சத்து குறைபாடும் ஏற்பட்டது.

    இதையடுத்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22-ந்தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பிரிவுகளின் சிறப்பு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால் மறுநாளே அவர் காய்ச்சலில் இருந்து குணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. என்றாலும் மற்ற உடல்நல பிரச்சினைகளுக்கு தற்போது அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி கடந்த சில தினங்களாக வதந்தி பரவியது. அதை திட்டவட்டமாக மறுத்த அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், “முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலமாக உள்ளார். அவர் வேகமாக குணம் அடைந்து வருகிறார்” என்று தெரிவித்தனர்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இன்று (சனிக்கிழமை) 10-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நன்றாக உடல்நலம் தேறி இருப்பதாக அ.தி.மு.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இங்கிலாந்து நாட்டில் இருந்து பிரபல டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே சென்னை வந்துள்ளார். லண்டனில் உள்ள பிரிட்ஜ் மருத்துவமனையைச் சேர்ந்த இவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு, அடுத்து எத்தகைய சிகிச்சை முறைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.

    உலக அளவில் தீவிர சிகிச்சை பிரிவின் ஆலோசகராக கருதப்படும் இவர் நேற்று காலை சென்னை வந்ததும், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பார்த்தார். கடந்த ஒரு வாரமாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவர் கேட்டறிந்தார்.

    பிறகு அவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை ஆய்வு செய்து சிகிச்சை அளித்தார். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களுடன் கலந்து ஆலோசித்து அவர் சிகிச்சை முறைகளை தொடரச் செய்தனர்.

    டாக்டர் ரிச்சர்ட் ஜான் உலக அளவில் நுரையீரல் பிரச்சினை, உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய் தொற்று மற்றும் உடல்சத்து குறைபாடுக்கான தீர்வு காண்பது ஆகிய பிரிவுகளில் சிகிச்சை அளிப்பதில் புகழ் பெற்றவர். அவர் தன் அனுபவத்தின் அடிப்படையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மேலும் சில சிகிச்சைகளை அளிக்க உத்தரவிட்டார்.

    அதன்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கூடுதலாக இன்று சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்த புதிய சிகிச்சை முறை காரணமாக அவரது உடல்நிலையில் வேகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து லண்டன் டாக்டர் ரிச்சர்ட் மேலும் 2 நாட்கள் சென்னையில் தங்கி இருந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க உள்ளார்.

    டாக்டர் ரிச்சர்ட் ஜான் நேற்று அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களிடம் கூறுகையில், “முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறீர்கள்” என்று பாராட்டும், திருப்தியும் தெரிவித்தார். அவர் ஆலோசனைப்படி முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்னும் சில தினங்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுவார் என தெரிகிறது.

    லண்டன் டாக்டர் சிகிச்சையைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்துள்ளனர்.
    Next Story
    ×