search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு
    X

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் ஏற்கனவே 6 ஆயிரத்து 700 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இதில் கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது 6 ஆயிரத்து 200 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

    இந்த டாஸ்மாக் கடைகளில் 7 ஆயிரத்து 204 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரத்து 677 விற்பனையாளர்கள் மற்றும் 3 ஆயிரத்து 753 உதவி மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 634 டாஸ்மாக் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளியையொட்டி போனஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


    அதன்படி, போனஸ் 8.33 சதவீதம், கருணை தொகை 11.67 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் போனஸ் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த போனஸ் 2 தவணையாக ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்த அறிவிப்பு படி பார்க்கும் போது, மேற்பார்வையாளர்களுக்கு ரூ.16 ஆயிரத்து 300-ம், விற்பனையாளர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 80-ம், உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.9 ஆயிரத்து 60-ம் தீபாவளி போனசாக கிடைக்கிறது.

    இது கடந்த ஆண்டை காட்டிலும் தீபாவளி போனஸ் உயர்த்தி வழங்கப்பட்டு இருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு போனஸ் உச்ச வரம்பு ரூ.3 ஆயிரத்து 500 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு போனஸ் உச்ச வரம்பை தளர்த்தி ரூ.7 ஆயிரமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாகவே டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் உயர்ந்து இருக்கிறது. 2 தவணையாக வழங்கப்படும் தீபாவளி போனசில், முதல் தவணை நேற்று இரவு ஊழியர்களின் வங்கி கணக்கில் போடப்பட்டு விட்டதாகவும், 2-ம் தவணை இன்னும் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் வழங்கப்பட இருப்பதாகவும் டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.
    இதுகுறித்து தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் தனசேகரன் கூறியதாவது:-


    தமிழக அரசு டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் உச்சவரம்பை தளர்த்தி இரட்டிப்பாக வழங்கி இருப்பதற்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றியை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரிவிக்கிறோம். மேலும், அவர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணமடைய எங்கள் சங்கம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கிறோம்.

    மத்திய அரசு போனஸ் உச்சவரம்பை 2014-2015-ம் ஆண்டிலேயே தளர்த்தி இருந்தார்கள். அதன்படி வைத்து பார்க்கும் போது, கடந்த ஆண்டு முதலே எங்களுக்கு போனஸ் உயர்த்தப்பட்டு வழங்கி இருக்க வேண்டும். எனவே கடந்த ஆண்டு எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத்தொகையையும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×