search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து முன்னணி பிரமுகர் கொலை சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது
    X

    இந்து முன்னணி பிரமுகர் கொலை சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது

    இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது. கூடுதல் ஆவணங்கள் டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்கப்பட்டது.
    கவுண்டம்பாளையம்:

    கோவை மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த 22-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.

    கொலையாளிகளை பிடிக்க டி.ஐ.ஜி. நாகராஜன் மேற்பார்வையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சசிகுமாருக்கு ஏற்கனவே வந்த மிரட்டல்கள், அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகள், கொலையாளிகள் பற்றி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் சேகரித்து விசாரணை நடத்தினர். எனினும் கொலையாளிகள் பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி டி.ஜி.பி. ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. கரன்சின்கா நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கொலை நடந்த சுப்பிரமணியம்பாளையம் மற்றும் துடியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    பின்னர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. நாகராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரம்யாபாரதி உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கைப்பற்றிய ஆவணங்கள், செல்போன்கள், செல்போனுக்கு வந்த அழைப்புகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி மையத்தில் செயல்பட்டு வரும் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு டிவிசன் பிரிவு (எஸ்.ஐ.டி.) அலுவலகம் இந்த கொலை வழக்கை விசாரிக்கும் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.

    சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.பி. கரன்சின்கா கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகர கமி‌ஷனராக பணியாற்றியவர். கோவையின் சூழலை நன்கு அறிந்தவர். மேலும், சி.பி.சி.ஐ.டி.யின் எஸ்.ஐ.டி. பிரிவு போலீசார் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள், சர்வதேச தொடர்பில் உள்ள குற்றவாளிகள், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் குறித்து விசாரணை நடத்துவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.

    எனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×