search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இனயம் சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு எதிர்ப்பு: குறும்பனை முதல் நீரோடி வரை மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்
    X

    இனயம் சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு எதிர்ப்பு: குறும்பனை முதல் நீரோடி வரை மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்

    இனயம் சரக்கு பெட்டக துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை முதல் நீரோடி வரையிலான கடலோர கிராம மக்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டுப்படகு மற்றும் கட்டுமர மீனவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
    பள்ளியாடி:

    குமரி மாவட்டம் இனயம் கடற்கரையில் பன்னாட்டு சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. துறைமுகம் அமைந்தால் இனயம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலோர கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், மீனவர்களின் குடியிருப்புகள், வழிபாட்டு தலங்கள் அகற்றும் நிலை உருவாகும் என்றும் மீனவர்கள் புகார் கூறினர்.

    எனவே இனயத்தில் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

    இனயம் சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இனயம், குளச்சல், ஹெலன்நகர் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் நடந்த உண்ணாவிரதம் நேற்று முன்தினம் தேவிகோட்டில் நடந்தது. நேற்று துறைமுக எதிர்ப்பு குழுவினர் கடலில் படகுகளில் சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே துறைமுகம் அமைக்க நில அளவீடு செய்ய மாநில அரசு அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி இன்று மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குறும்பனை முதல் நீரோடி வரையிலான கடலோர கிராம மக்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டுப்படகு மற்றும் கட்டுமர மீனவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மீனவர்களின் படகுகள், கட்டுமரங்கள் அனைத்தும் கரையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
    Next Story
    ×