search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்காதல் தகராறில் சிதம்பரம் லாரி டிரைவர் கொலை: வீட்டுக்கு தீவைப்பு
    X

    கள்ளக்காதல் தகராறில் சிதம்பரம் லாரி டிரைவர் கொலை: வீட்டுக்கு தீவைப்பு

    கள்ளக்காதல் தகராறில் சிதம்பரம் லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள வடக்கு தில்லைநாயகபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). கூலி தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

    சுரேஷ் வீட்டின் அருகே வசித்து வருபவர் கார்த்தி (24). இவருக்கும், லட்சுமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது சுரேசுக்கு தெரிய வந்தது. அவர்களை சுரேஷ் கண்டித்தார்.

    இதனால் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு லட்சுமியும், கார்த்தியும் வீட்டில் இருந்து வெளியேறி சிதம்பரம் அருகே உள்ள கொத்தன்குடி பகுதியில் வசித்து வருகின்றனர். சிதம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கார்த்தி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கார்த்தியுடன் வசித்து வரும் லட்சுமி, தனது கணவர் சுரேசிடம் சென்று, ஜீவனாம்சம் தொகை தரும்படி கேட்டார். இதனால் சுரேஷ் மன வேதனை அடைந்தார்.

    இது குறித்து அவர் தனது உறவினரும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வரும் தண்டபாணி என்பவரிடம் கூறினார்.

    இதையடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு கார்த்தியை சந்தித்து தண்டபாணி கண்டித்தார். இதனால் அவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டன

    இது தொடர்பாக கிள்ளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வந்தனர்.

    தண்டபாணி தன்னை கண்டித்ததால் கார்த்தி ஆத்திரம் அடைந்தார். அவரை கொலை செய்ய முடிவு செய்தார். அதற்கான நேரம் பார்த்து காத்திருந்தார்.

    நேற்று இரவு தண்டபாணியும், அவரது நண்பரும், மினி லாரி டிரைவருமான செல்வமும் (40) சிதம்பரம் வண்டிமேடு பகுதிக்கு டீ குடிக்க வந்தனர்.

    டீ குடித்து விட்டு அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர். அப்போது காரில் 5 பேர் அங்கு வந்தனர். திடீரென்று அவர்கள் காரில் இருந்து வீச்சரிவாளுடன் கீழே இறங்கினர்.

    தண்டபாணியை சரமாரியாக வீச்சரிவாளால் வெட்டினர். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், அவரை தொடர்ந்து விரட்டி சென்றனர்.

    அவர்களை செல்வம் தடுத்தார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரையும் சரமாரியாக வெட்டினர். இந்த தாக்குதலில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதைப்பார்த்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த தண்டபாணி, செல்வம் ஆகிய 2 பேரையும் மீட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.

    தண்டபாணி மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    செல்வம் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் வடக்கு தில்லை நாயகபுரத்தில் உள்ள கார்த்தி வீட்டிற்கு விரைந்து சென்றனர். வீட்டிற்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். பின்னர் வீட்டுக்கு தீ வைத்தனர்.

    அங்கு நின்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதை தடுக்க வந்த கார்த்தியின் அண்ணன் கதிரையும் அடித்து விரட்டினர்.

    இந்த சம்பவம் குறித்து கிள்ளை போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர வடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜ் அதிரடி விசாரணை நடத்தினர்.

    மினி லாரி டிரைவர் செல்வம் கொலை தொடர்பாக கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சிதம்பரம் வடக்கு தில்லை நாயகபுரத்தைச் சேர்ந்த கார்த்தி, அவரது அண்ணன் கதிர், கந்தமங்கலத்தைச் சேர்ந்த ஸ்டாலின், உத்தம சோழமங்கலத்தைச் சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், சிதம்பரம் கஸ்பா பகுதியை சேர்ந்த சந்துரு ஆகிய 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை சம்பவத்தை தொடர்ந்து வடக்கு தில்லை நாயகபுரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×