search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் மரணம் - பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
    X

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் மரணம் - பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் மரணமடைந்த சம்பவத்தையடுத்து, மர்ம காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பள்ளிப்பட்டு, திருத்தணி, பொன்னேரி பகுதியில் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    கடந்த மாதம் திருத்தணியை அடுத்த காவேரி ராஜபுரத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களும், பள்ளிப்பட்டு, கீரப்பாக்கத்தில் தலா ஒரு சிறுவனும், மீஞ்சூரில் ஒரு சிறுமியும் என மொத்தம் 7 பேர் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

    இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சுகாதாரப் பணிகளை முடுக்கி விட்டனர். கிராமங்களில் மருத்துவ குழு அமைக்கப்பட்டது. நில வேம்பு கசாயமும் வழங்கப்பட்டு வந்தது.

    மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். மர்ம காய்ச்சல் பாதித்த கிராமங்களையும் ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாரப்பன் தெருவைச் சேர்ந்த செந்தில்குமாரின் 2 வயது மகன் தீபக் மர்ம காய்ச்சலால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டு இருந்தான்.

    நேற்று முன்தினம் தீபக்கை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். உடல்நிலை மோசம் அடைந்த அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இன்று மதியம் சிறுவன் தீபக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது.

    மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் தீபக் பலியானது பற்றி தெரிந்ததும் வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. சிறுவன் வசித்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது வீட்டின் அருகே குட்டையில் அதிக அளவு தண்ணீர் தேங்கி இருந்தது.

    அதனை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அப்பகுதியில் சுகாதாரப் பணிகளை மேற் கொள்ளவும் அறிவுறுத்தினார்.

    திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் இன்னும் 100-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதே போல் திருத்தணி, பொன்னேரி, அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை டாக்டர்கள் குழுவினர் கண்காணித்து வருகிறார்கள்.

    மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×