search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தொடரை இழக்கும் அபாயம்
    X

    3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தொடரை இழக்கும் அபாயம்

    செஞ்சூரியன் டெஸ்டில் இந்தியா 35 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறி வருகிறது. இந்த டெஸ்டில் தோற்றால் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்கும் நிலை ஏற்படும்.
    செஞ்சூரியன்:

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியன் சூப்பர் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 335 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 307 ரன்னும் எடுத்தன.

    28 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 258 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    தென் ஆப்பிரிக்கா அணியின் 2-வது இன்னிங்சில் டிவில்லியர்ஸ் அதிகபட்சமாக 80 ரன்னும், எல்கர் 61 ரன்னும் எடுத்தனர். முகமது ‌ஷமி 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    287 ரன் இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டை இழந்து 35 ரன் எடுத்து இருந்தது.

    முரளி விஜய் 9 ரன்னில் ரபடா பந்திலும், லோகேஷ் ராகுல் (4 ரன்), கேப்டன் வீராட் கோலி (11) ஆகியோர் நிகிடி பந்திலும் ஆட்டம் இழந்தனர். புஜாரா, பார்த்தீவ் பட்டேல் தலா 5 ரன்னில் ஆட்டம் இழக்காமல் உள்ளனர்.

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்தியாவின் வெற்றிக்கு மேலும் 252 ரன் தேவை. கைவசம் 7 விக்கெட் உள்ளது.

    இந்திய வீரர்கள் தோல்வியை தவிர்த்து வெற்றிக்காக போராடுவார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அது மிகவும் சவாலானது. முதல் இன்னிங்சில் 153 ரன்கள் குவித்த வீராட் கோலி எளிதில் ஆட்டம் இழந்தது மிகப்பெரிய இழப்பாகி விட்டது.

    புஜாரா, பார்த்தீவ் பட்டேல், ஹர்த்திக் பாண்டியா, ரோகித் சர்மா ஆகிய 4 பேட்ஸ்மேன்களே உள்ளனர். இதில் ஹர்த்திக் பாண்டயா ஒருவர் மீது மட்டும் நம்பிக்கை இருக்கிறது. அவர் சிறப்பாக விளையாடினால் தோல்வியை தவிர்த்து வெற்றியை பெறலாம்.

    புஜாரா, ரோகித்சர்மா ஆகியோர் நல்ல நிலையில் இல்லை. இருவரும் கடுமையாக போராட வேண்டும். பந்து வீச்சாளர்களில் அஸ்வின் முதல் இன்னிங்சில் 38 ரன்கள் எடுத்தார். இதனால் பவுலர்களும் கடுமையாக போராட வேண்டும். தென்ஆப்பிரிக்கா பந்துவீச்சில் சிறப்பாக இருப்பதால் இந்திய அணி தோல்வியை தவிர்ப்பது கடினம் என்று கருதப்படுகிறது.

    கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்டில் 72 ரன்னில் தோற்றது. இந்த டெஸ்டில் தோற்றால் தொடரை இழந்து விடும். 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கடைசியாக 2014-ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. அதன் பிறகு இந்தியா 10 டெஸ்ட் தொடரில் விளையாடிவிட்டது. இதில் ஒரு தொடர் ‘டிரா’ ஆனது. தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

    இந்தியா தொடர் சாதனைக்கு தென் ஆப்பிரிக்கா இன்று முற்றுப்புள்ளி வைக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடினால் வெற்றி பெற்றால் தொடரை இழக்காமல் இருக்கலாம். இதனால் இன்றைய கடைசி நாள் ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.
    Next Story
    ×