search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெர்த்தில் ஆஸ்திரேலியா 662 ரன்கள் குவித்து டிக்ளேர்; இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இங்கிலாந்து?
    X

    பெர்த்தில் ஆஸ்திரேலியா 662 ரன்கள் குவித்து டிக்ளேர்; இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இங்கிலாந்து?

    பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 662 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் இங்கிலாந்து 4 விக்கெட்டை இழந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பெர்த் வாகா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 14-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    ஸ்டோன்மேன் (56), தாவித் மலன் (140), பேர்ஸ்டோவ் (119) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 403 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்டும், ஹசில்வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்மித், மிட்செல் மார்ஷ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஸ்மித் இரட்டை சதமும், மிட்செல் மார்ஷ் 150 ரன்னும் அடித்தனர்.

    இருவரின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 549 ரன்கள் குவித்திருந்தது. ஸ்மித் 229 ரன்களுடனும், மிட்செல் மார்ஷ் 181 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.


    2-வது இன்னிங்சில் 55 ரன்கள் சேர்த்த வின்ஸ்

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்மித் மேலும் 10 ரன்கள் எடுத்து 239 ரன்னில் ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் நேற்றைய 181 ரன்னுடன் வெளியேறினார். அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் பெய்ன் (49 அவுட் இல்லை), கம்மின்ஸ் (41) அதிரடியாக விளையாட ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 662 ரன்கள் குவித்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஸ்டோன்மேன் 3 ரன்கள் எடுத்த நிலையிலும், அலஸ்டைர் குக் 14 ரன்கள்  எடுத்த நிலையிலும் ஹசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    அடுத்து வந்த வின்ஸ் நிலைத்து நின்று விளையாட ஜோ ரூட் 14 ரன்னில் வெளியேறினார். வின்ஸ் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். 5-வது விக்கெட்டுக்கு தாவித் மலன் உடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார்.


    குக் அடித்த பந்தை அபாரமாக கேட்ச் பிடித்த ஹசில்வுட்


    இந்த ஜோடி இன்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இதனால் இங்கிலாந்து 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. தாவித் மலன் 28  ரன்னுடனும், பேர்ஸ்டோவ் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இங்கிலாந்து 127 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. தாவித் மலன், பேர்ஸ்டோவ் விக்கெட்டை நாளை காலையில் விரைவாக வீழ்த்திவிட்டால், ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை 3-0 எனக் கைப்பற்றிவிடும்.
    Next Story
    ×