search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?: நாளை 3-வது ஒரு நாள் போட்டி
    X

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா?: நாளை 3-வது ஒரு நாள் போட்டி

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் நாளை நடக்கிறது. இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெரும் ஆர்வத்தில் உள்ளது.
    இந்தூர்:

    ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது . சென்னையில் நடந்த முதல் போட்டியில் 26 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது போட்டியில் 50 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நாளை நடக்கிறது.

    விராட்கோலி தலைமையிலான இந்திய அணி நாளைய ஆட்டத்திலும் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனையுடன் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி இந்த தொடரில் மிகவும் நம்பிக்கையுடன் ஆடி வருகிறது.

    இலங்கை தொடரில் 9 ஆட்டத்தில் தொடர்ச்சியாக வென்றது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டியில் வென்று இருந்தது. இந்த வெற்றியை நீட்டிக்கும் வகையில் இந்திய வீரர்கள் அனைவரும் திறமையுடன் விளையாடுவார்கள். அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என்று தெரிகிறது. ஒரு வேளை மனிஷ் பாண்டே நீக்கப்பட்டால் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

    ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

    இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது. கேப்டன் சுமித், மேக்ஸ்வெல், பல்க்னெர், ஸ்டோனிஸ் ஆகியோர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். இந்தியாவின் சுழற்பந்து வீச்சு ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சவாலாக இருக்கிறது. அதே நேரத்தில் அந்த அணியிலும் சிறந்த சுழற்பந்து வீரர்கள் இல்லை.

    ஆஸ்திரேலிய வீரர்கள் நாளைய ஆட்டத்தில் ஆக்ரோ‌ஷத்தை வெளிப்படுத்துவர்கள். அதேநேரத்தில் இந்திய வீரர்கள் தொடரை வெல்ல போராடுவார்கள். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தூரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் போட்டி பாதிக்கப்படுமா? என்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 126-வது போட்டியாகும். இதுவரை நடந்த 125 ஆட்டத்தில் இந்தியா 43-ல் ஆஸ்திரேலியா 72-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டி முடிவு இல்லை.

    பகல்-இரவாக நடைபெறும் நாளைய போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ராகுல், கேதர்ஜாதவ், ரகானே, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ்பாண்டே, அக்‌ஷர்பட்டேல், யசுவேந்திர சஹால், பும்ரா, முகமது ‌ஷமி, உமேஷ்யாதவ், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார்.

    ஆஸ்திரேலியா: ஸ்டீவன் சுமித் (கேப்டன்), வார்னர், ஆரோன்பிஞ்ச், மேக்ஸ்வெல், டிரெவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கம் மேத்யூ வாடே, கும்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நைல், பல்க்னெர், ஸ்டோனிஸ், கானே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஆஸ்டன் அகர், ஹில்டன் கார்ட் ரைட்.
    Next Story
    ×